சமீபத்தில் குமுதத்தில் (31.03.2010) படித்தது. குமுதத்தை படிக்காத தமிழ் மனங்களின் பார்வைக்கு என வெளியிடுகிறேன். ஒரு தமிழன் என்ற முறையில் இப்படியாவது என் உணர்வை காட்டிக்கொள்கிறேன்.
இக்கட்டுரை வன்னியிலிருந்து தீபச் செல்வன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
" கிளிநொச்சியை விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது இருந்த செழிப்பையும், வலிமையையும் நான் நினைவு கொண்டு பார்க்கிறேன். ஆனால், இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. இராணுவ மயமும், இராணுவ வீரர்களின் நடமாட்டமும் என அங்கு பயங்கரமாகத்தான் மிகுந்திருக்கின்றது.
எனக்கு சிறிய வயதிலிருந்தே தெரிந்த ஒரு அக்கா, அவர்கள் 1990 ல் இடம் பெயர்ந்தவர்கள். பின்னர், 1996 லும் இடம் பெயர்ந்து எங்களுடன் வந்து இருந்தவர்கள். அந்த அக்காவின் கணவர் 2001 ல் நடைபெற்ற சமர் (போர்) ஒன்றில் வீர மரணமடைந்தார். அப்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. பின்னர், அவருக்கு மறு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இன்று அவரைப் பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது. ஒரு கண்ணை இழந்து உடல் முழுவதும் காயத்துடன் மரத்தின் கீழாக சமைத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு இரண்டாவது திருமணத்தின் பொழுது பிறந்த குழந்தையும், மூத்த குழந்தையும், கணவனும், சகோதரனும் இறுதி யுத்தத்தில் பலியாகியிருந்தனர். அவரது தலையுள்ளும் ஷெல் துண்டுகள் எடுக்கமுடியாது இருக்கின்றன. இழப்புகளும், அழுகைகளும் என்றும், இன்றும் தனித்து போயிருக்கின்றது. சகோதரனை இழந்த துக்கத்தில் எப்பொழுதும் அழுது புலம்பும் தாயுடன் அவர் சிதைந்து போன வீட்டை மீள பொறுக்கிகே கட்டிக்கொண்டிருக்கிறார். இதுவரையில் அவர் விடுதலை ஆகவில்லை. தடுப்பு முகாமில் இருந்து இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்க அனுமதி கேட்டு வந்த அவர் மறு நாள் தடுப்பு முகாமிற்கு திரும்ப வேண்டும்.
தனக்கு கண்கள் வேண்டாம் என்று கூறிக்கொண்டே இருந்தார். வாழ்வைத் தொடங்க, வாழ பிடிப்பற்று பேசிக் கொண்டு இருந்தார். தன் குழந்தைகளைப் பறிகொடுத்த வேதனைகளை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த குழந்தைகளின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். இவரைப் போல், எத்தனையோ சகோதரிகள்......
சமர்கள் நடந்த இடம் என்பதால் மண் முட்டைகளும், மண் அரண்களும் எங்கும் கிடக்க குண்டுகளில் நிலம் எரிந்து போயிருந்தது. அந்த நிலத்தில் என்ன பயிரை நாட்ட முடியும்?
கிளிநொச்சி நகரத்தில் சில கடைகள் இப்பொழுது மீளா திறக்கப் பட்டிருக்கின்றன. அங்கு தமிழில் எழுதப்பட்ட கடைகளின் பெயர்களை வெள்ளை வண்ணம் பூசி படையினர் அழித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை படையினர் தம் சொந்த தேவைகளுக்கு எடுத்துள்ளனர்.
எப்பொழுது வன்னி நிலத்தில் இயல்பு வரும் என்று தெரியவில்லை. அங்கு எப்பொழுது மக்கள் முழுமையாக அனுமதிக்கப் படுவார்கள் என்று தெரியவில்லை. முழுக்கு முழுக்க படைகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருக்கிறது. அவர்களின் பாவனையில் இருக்கிறது.
தமிழர்களின் நிலைமை இப்படியிருக்க, சிங்களவர்கள் நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் வடக்கை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்களவர்களுக்கு வடக்கு பார்க்க துடிக்கும் சுற்றுலா தலமாக தென்படுகிறது.
சிங்களவர்கள் இங்கு வந்து பார்ப்பவை எல்லாம் யுத்தத்தில் சிதைந்த நிலத்தையும் அதில் பாதிக்கப்பட்ட மனிதர்களையும் தான். முழுக்க முழுக்க முப்பது ஆண்டுகள் சிதைவுகளுடன் இருக்கும் ஈழத்தை அவர்கள் பார்க்கிறார்கள். அவைகளில் தங்கள் படை நிகழ்த்திய வீரதீரங்களைப் பார்க்கிறார்கள். அகதிகளாய் அலையும் மக்களை, அங்கங்களை இழந்து வலியுறும் மக்களை அவர்கள் பார்க்கிறார்கள்.
இப்படி சுற்றுலா வரும் சிங்கள மக்களை பெரும் குதுகலத்துடன் அவர்களின் படைகள் வரவேற்கின்றன. சிங்கள மக்கள்களும் பெரும் மகிழ்ச்சியுடன் படைகளைச் சந்திக்கிறார்கள்.
அவர்கள் ஒரு பௌத்த நகரத்திற்கு வருவது போல உணர்வார்கள். வன்னி நிலமெங்கும் புத்தர் சிலைகளை படையினர் நட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வழிபாடுகள் நாள் தோறும் நடைபெறுகின்றன. விடுதலைப்புலிகளிடமிருந்து வன்னி நிலத்தைக் கைப்பற்றியவுடனே இந்த புத்த சிலைகளை நடுவதில் படையினர் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். யாழ்ப்பாணம், நாகவிகாரை, நாயினா தீவு, விகாரை, மாதகல் விகாரை என்று பல இடங்கள் சிங்களவர்கள் வந்து வழிபடும் சுற்றுலா தளங்களாக மாறியிருக்கின்றன.
எமது மக்கள் இன்றும் வீடுகளுக்குத் திரும்பவில்லை. வீடுகளும் இல்லை. கடைகளும் இல்லை. சிதைந்த உருத் தெரியாமல் கிடக்கின்றது வாழ்வு. எப்படி எதை வைத்து தொடங்குவது என்று அடிப்படை இல்லாமல் இருக்கின்றது. யுத்தத்தில் மெலிந்த மக்கள் தடுப்பு முகாம்களில் வாடிய மக்கள், குழந்தைகள் போஷாக்க்ற உணவுகளை சாப்பிடுகின்றனர். இதற்கு மத்தியிலும் அவர்கள் முகத்தில் தவழும் புன்னகைதான் நம்பிக்கையின் அடையாளம். புழுதியும் வெட்கையும் நுளம்பும் இருட்டும் என்று வாழ்க்கை பயங்கரமானதாகத் தொடருகிறது."
தீபச்செல்வன் பற்றி!
இப்படி ஈழ மக்களின் இன்றைய துயர நிலையை, தொடரும் சோகத்தைச் சொல்லும் தீபச்செல்வன்,'ஆளற்ற நகரத்தைத் தின்ற மிருகம்', 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' ஆகிய கவிதைத் தொகொப்புகளின் மூலம் அறிமுகம் ஆனா இளம் கவிஞர். 'தீபம்', என்ற தன் வலைப்பதிவில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஈழம் குறித்து நிறைய எழுதி வருகிறார். அதோடு, யுத்த பூமியின் சாட்சியாக ஈழத்தில் இன்றும் வசித்து வருகிறார்.
என் கருத்தைக் கேளுங்கள்:
இலங்கையில் இது ஒரு நிகழ்வு மட்டுமா? எத்தனையோ தமிழ் சகோதரர்கள்/சகோதரிகள் மற்றும் அவர் தம் குடும்பங்களின் மறு நிமிடங்கள் நிச்சயமற்றவையாகத் தான் தொடர்கின்றன. அவர்தம் எதிர்காலம் ................???????????????. கேள்விக்குறிகளை கணக்கிடமுடியாது உள்ளது. தமிழர் இனம் உலகெங்கும் பரவி இருந்தும் உலகில் எத்திசையிலாவது தமிழன் பாதிக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றான். இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது? தமிழ் நாட்டிலும் அப்படியே! சென்னை பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க இந்தியாவின் ஒரு மாநிலமான ஆந்திரா பகுதிக்குச் சென்றால் அங்கு நம் மீனவர்களின் படகுகளைப் பிடித்துக்கொண்டு அத்தனை பேரையும் அடித்து சித்திரவதைக்கு ஆளாக்குவதும், படகில் உள்ள மீன்களையும் எடுத்துக் கொண்டு, கரைக்கு நம்மவர்களை கொண்டு போய் கட்டி வைப்பதும், பிணையத் தொகையாக பல இலட்சங்களை கறப்பதும் சமீப காலமாக நடந்துகொண்டுதான் இருந்தது. தெற்கில் கச்சத் தீவு பக்கமாக மீன் பிடிக்கையில் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு பலியாவதும் தினசரி செய்திகளாக இருக்கிறது.
தமிழா! நீ எப்போது தான் நிம்மதியாக வாழப்போகிறாய்? உலகில் மற்ற இனங்களெல்லாம் நிம்மதியாய் வாழுகையில் நீ மட்டும் கவலைகளிடம் கடன் வாங்கி கலைந்து போவது ஏனப்பா?
No comments:
Post a Comment