சமீபத்தில் சிங்கப்பூர் காவல்துறையின் இணையதளம் சென்றேன். பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அண்மையில் காவல்துறையிடம் சிக்கிய போலி வீட்டு முகவர்கள் பற்றிய செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நாள்: 20.04.2010 (செய்தியை அப்படியே மொழி பெயர்த்து வெளியிடுகிறேன்)
"நேற்று மாலை, தொடர்ச்சியான வாடகை மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும், 44 மற்றும் 47 வயது நிரம்பிய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
05.04.2010 அன்று, 40 வயது நிரம்பிய வெளிநாட்டு ஆடவர் ஒருவர், தாம் சிங்கப்பூர் டாலர் 3,500 அளவில் சந்தேகத்துக்குரிய இரு பெண்களால் ஏமாற்றப்பட்டதாக காவல்துறையினர் வசம் புகார் அளித்திருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட கிளமெண்டி வட்டார காவல்துறை அதிகாரிகள், இந்த இரண்டு சந்தேகத்துக்குரிய நபர்களைப் பற்றிய புலன்விசாரணையை மேற்கொண்டனர். குற்றவாளிகள் இருவரும் நிரந்தர வசிப்பிடம் கொண்டிருக்காததால் எளிதில் சிக்கவில்லை. கடந்த 19.04.2010, மாலை 06:45 அளவில் ஜூ சியாட் அருகில் ஒரு தங்கும் விடுதியில் வைத்து காவல்துறை அதிகாரிகள், இந்த இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில், பிப்ரவரி 2010 முதல், இக்குற்றவாளிகள் டோவர் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியை திருட்டுத்தனமாக வாங்கியுள்ளனர். பின்னர், இதே குடியிருப்பை வாடகைக்கு விடுவதாக இணையதளங்கள் மற்றும் சிறு பிரசுரங்கள் மூலமாக விளம்பரப் படுத்தியுள்ளனர். இவ்விலம்பரங்களைக் கண்ட வெளிநாட்டு நபர்கள் இவர்களை அணுகியுள்ளனர். இவர்களிடம், குடியிருப்புப் பகுதிக்கான முன்வைப்புத் தொகை மற்றும் முன் வாடகைத் தொகை போன்றவற்றைக் கொடுத்துள்ளனர். இவற்றைப் பெற்றுக்கொண்ட இப்பெண்களை பணம் கொடுத்தவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்படியாக இந்த இரண்டு பெண்களும் மொத்தமாக ஆறு குற்றங்களில் சம்பந்தப்பட்டு, மொத்தம் சிங்கப்பூர் டாலர்கள் 20,000 வரை ஏமாற்றியுள்ளனர் என நம்பப்படுகிறது.
இக்குற்றவாளிகள் இருவரும் 21.04.2010 அன்று நீதிமன்றத்தில், மோசடி செய்த குற்றத்திற்காக ஒப்படைக்கப்பட்டிருப்பர். இக்குற்றத்திற்காக இவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை தரப்படும். தண்டத்தொகையும் விதிக்கப்படும்".
எனவே, வீடு தேடுவோர் தகுந்த, உரிமம் பெற்ற முகவர்கள்/நிறுவனங்கள் மூலமாக வீடு தேடுங்கள். தேவையற்ற பண விரயத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திடுங்கள். நேர் வழியே செல்லுங்கள். குறுக்கு வழிகள் சில நேரங்களில் பயன் தந்தாலும், அநேக நேரங்களில் தொல்லைகளையே பரிசாகத் தரும்.
No comments:
Post a Comment