'' அன்புக்குரியவளே!
இந்த அன்பிற்கே உரியவளே!
இதோ உன்னவனின் காதல் வரிகள்.
முடிவில்லா தொலை தூர பயணமாய் ஓடிக்கொன்டிருந்தவன்
அன்று முகவரி தேடிக் கொண்ட நாள்
நம் இரு மன இணைவு கண்ட திருமணம்!
ஆயிரம் சொத்துக்கள் அடைந்தென்ன
இருக்கும் லாபம் ?
உறவுகளின் பகையும், உயிர் பயமும் தானே?
எனக்கென்று பிறந்த உன் நினைவில்
சலனமற்று உறங்குவதிலும்
எத்தனை சுகம்... சுகம்!
எத்தனை நாட்களை அன்பே
வீணடித்துவிட்டேன்?
காதல் தெய்வம் உன்னை எனக்கு
முன்பே காட்டிவிட்டிருக்கக் கூடாதோ பெண்ணே?
இருவரும் என்று அன்பே
இணைந்திருப்பது ?
நெஞ்சக்கூட்டில் சில வேளை
வேதனை முட்கள்
கீறிடும் காயம்
எந்த மருத்துவத்தால் ஆற்றுவேன்?
ஆறு தாண்டிச் சென்றாலும்
துயரம் கொண்டவன்
கடல்கள் தாண்டி
காசுகள் சேர்த்து
கலங்கிக் கொண்டிருக்கிறேனே!
வயதைத் தொலைத்து,
வாழ்வு சுகங்கள் தொலைத்து
சிகரம் எட்டுவேன் என்று
சிந்தித்துக் கிடப்பதில்
மகிழ்ச்சி என்ன கிடைக்கிறது?
என்னே வாழ்க்கை!
நரகத்தை, வாழும் காலத்தே
கைப்பிடித்து,
கட்டிப்பிடிக்கத்தான்
திரைகடல் வசனம் சொன்னார்களா
செந்தமிழ் நாட்டிலே?
காத்திரு! காத்திரு!!
கலங்காமல் காத்திரு!
உன் கரங்களைப் பற்றிக்கொண்டு
நம் காதலை மெருகேற்றும்
பொன்மாலை பொழுதுகளுக்காய்! (2005)
No comments:
Post a Comment