முருகன் என்றால் அழகு, அழகு என்றால் முருகன். முருகன் கலியுகத் தெய்வம். முருகன் மீது கடவுள் எனும் நிலையையும் தாண்டி அவன்பால் அன்பு கொண்டோருக்கெல்லாம் அவன் தம் திருவிளையாடல்கள் அறிந்திருப்பர், உணர்வால் தெரிந்திருப்பர், தெளிந்திருப்பர். முருகனைப் போற்றி பலப் பல பெரியோர் , பல்வேறு கால கட்டங்களில் தமிழ் இலக்கியங்களில் பாடி வைத்துள்ளனர். தமிழ் என்றால் அனைவருக்கும் நினைவில் தோன்றும் ஒரு பெயர் முருகன் எனும் அழகு தெய்வமே. தம் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் அவன். ஆபத்து எப்போதெல்லாம் அடியவர் வாழ்வில் குறுக்கிடுகிறதோ, அப்போதெல்லாம் "முருகா" , என்று அழைப்போருக்கும், நினைப்போருக்கும் எந்த ஒரு ஆபத்தையும் வேரறுக்கும் அன்புத் தெய்வம்.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முருகனின் பக்தர்கள், அடியவர்கள் உலகெங்கும் உண்டு. இதை நான் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியம் இல்லை என்பதும் எனக்கு தெரிந்த ஒன்றே. முருகன் மீது அனுதினமும் அன்பு கொண்டு விளங்கும் ஆன்றோர்கள், அடியவர்கள் உலகெங்கும் எம்பெருமானின் சிறப்பை வெளிகாட்டும் விதமாக தாம் வாழும் நாடுகளில் புதியதாகக் கோயில்கள் கட்டுவித்தும், ஏற்கனவே உள்ள கோயில்களின் பராமரிப்பை மேற்கொண்டும், தொன்மை நிறைந்த கோயில்களுக்கென பொருளுதவி செய்தும் தங்கள் அன்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், மலேசியாவைச் சார்ந்த திரு.சேந்தன், திருமதி.வள்ளி தம்பதியர் உலகெங்கும் உள்ள முருகன் கோயில் கொண்டுள்ள ஆலயங்களுக்கு யாத்திரைகள் மேற்கொண்டு அந்த ஆலயங்கள் பற்றிய புகைப்படங்கள், வரலாறு, முருகன் பற்றிய பாடல்கள், தமிழ்ப் பாடல்களின் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புக்கள் என தங்களின் இணைய தளத்தில் மிக நீண்ட காலமாக வெளியிட்டு வருகின்றனர். முருகன் மீது அன்புகொண்டு வாழும் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு தளம் இது.
சிங்கப்பூரிலும் முருகனுக்கென்று பல ஆலயங்கள் உள்ளன. அதில் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், அருள்மிகு முருகன் ஆலயம், ஸ்ரீ மலைக்கோயில் முருகன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் புகிட் பஞ்சாங் அருகில் திருக்குன்றத்தின் மீது ஆலயம் கொண்டிருக்கும் முருகனைத் தரிசிக்கும் பெரும்பேறு கிடைத்தது. இடப்பாகத்தில் தந்தை, தாயாரோடும், வலப்பக்கத்தில் சகோதரருடனும், வள்ளி தெய்வானை சமேதராக திருக்காட்சி தரும் முருகப்பெருமானை வணங்கி மகிழும் பெரும்பேறு பெற்றேன். அதுவரை, கடந்த பிப்ரவரி 14 நள்ளிரவு ஏற்பட்ட லாரி விபத்தில் எனது சகோதரனை (எனது அம்மாவின் சகோதரி மகன்) இழந்து, அதனால் ஏற்பட்ட சோகத்தை மறக்க இயலாமல், தினம் தினம் தவித்துக் கொண்டிருந்த வேளையில், முருகனின் ஆலயம் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அன்று முதல், என் மனதில் அழுந்தியிருந்த சோகம் ஒரு வழியாய் விடைபெற்றுப் போனது. இதெல்லாம் பிரமை என்று சொல்ல முயற்சிக்கும் நாத்திக வாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
குறிப்பிடத்தக்க விதமாக, சமய, இன நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்றும்படியாக ஆலயத்தின் கீழ்பக்கமாக சீன மக்களின் தெய்வமும், புத்தர் சன்னதியும், மற்றும் பிள்ளையார், பக்த ஆஞ்சநேயர், ராகவேந்திரர், திருமலை பெருமாள், விஷ்ணு, அன்னபூரணி, துர்கை அம்மன், நர்த்தன விநாயகர், ஐயப்பன், அரச மரம் உடனான நாகலிங்கம், காளி அம்மன், முனீஸ்வரர், விநாயகர் சன்னதிகள் உள்ளன. ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தளத்தில் நவக்கிரக சன்னதியும் இடம் பெற்றுள்ளது.
தேக்காவில் இருந்து முருகன் திருக்குன்றம் செல்ல விரும்பும் பக்தர்கள் புகிட் திமா சாலையில் உள்ள (லிட்டில் இந்தியா MRT அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து எண். 67 , 170 ஆகிய பேருந்துகள் மூலம் சென்றடையலாம். ஆலயத்தின் மிக அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. புதிதாக செல்வோர் புகிட் பஞ்சாங் LRT வளைவை அடையாளமாகக் கொள்ளலாம்.
கோயில் செல்லும் வழி வரைபடம்
கோயிலின் இணையதளம்
முருகன் பாடல்கள்
No comments:
Post a Comment