கடவுள் இருக்கிறானா? மனிதன் கேட்கிறான்...
அவன் இருந்தால் பூமியிலே எங்கே வாழ்கிறான்? - இந்த பாடல் பலரும் கேட்டிருக்கக் கூடும். பலரும் தங்கள் வாழ்க்கை பாதையில் மிகப் பலமுறை தங்கள் மனதுக்குள் கேட்டுக்கொண்டிருக்கக் கூடும். ஒவ்வொரு முறையும் நம்மால் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலைகளில் கடைசி ஆயுதமாக இறைவன் என்னும் ஒரு பெரிய சக்தியைத்தான் சரணம் அடைகிறோம். சிலருக்கு வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறும். சிலருக்கு, அழுது புரண்டாலும் ம்ஹூம்,, வாய்ப்பே இருக்காது. நினைத்தது நடந்தால் கடவுள் இருக்கிறான் என்பதும், நினைத்தது நிறைவேறவில்லை என்றதும், கடவுளா? அது யார் என்று கேட்பதுவும் நடக்கத்தான் செய்கிறது. உண்மையில் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? அவரின் உருவம் தான் என்ன? அவர் எங்கே இருக்கிறார்? அவரைப் பார்க்கத்தான் முடியுமா? அவருக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இருக்கிறதா? அவருக்கு பிடித்த சாதி எது? அவருக்கு பிடித்த மதம் எது? என்பன போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கும் அவரவர் மனநிலை, அறிவு, வயது ஆகிய இவற்றுக்கு ஏற்றாற்போல தோன்றும். இதற்கான விடைகளை நம் பெரியவர்கள் பல தரப்பட்ட கால கட்டங்களில், அவரவர் தம் உணர்தல் மூலமாக இவ்வுலகிற்கு உணர்த்தியுள்ளனர்.
கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினரும், அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்று ஒரு பிரிவினரும் சில வழிமுறைகள், கோட்பாடுகள், நிகழ்வுகள் மூலமாக நிரூபித்துக் கொண்டும் வாதிட்டுக் கொண்டும் இருக்கின்றனர். கடவுளின் இருப்பு நிலை குறித்து வாதிடும் தத்துவம் ஆத்திகம் என்றும், எதிர்நிலையை நாத்திகம் என்றும் சொல்கின்றனர்.
இங்கே நம்பிக்கையை மிக முக்கியமாகக் கொள்ள வேண்டும். சிலர் வேண்டுமானால் அறிவார்ந்த முறையில் சொல்லலாம். "இதோ என் தாய் இன்னார், தந்தை இன்னார் என்று என் கண்களுக்குத் தெரிகிறது, அதனால் அவர்கள் இருக்கிறார்கள். கடவுள் என்ற ஒருவரை என் கண்களுக்குத் தெரிவதே இல்லையே. புறக் கண்களுக்குத் தெரியாத ஒருவரை, ஒன்றை எப்படி இருப்பதாக ஒத்துக்கொள்ள முடியும்?" என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பதிலாக, காற்றை நம்மால் பார்க்க முடியாது. காற்று இருப்பதாக உணர்கிறோம். உயிர் வாழ காற்று (ஆக்சிஜன்) மிக அவசியம் என்று தெளிவும் பெறுகிறோம். காற்றைத்தான் நம்மால் காண முடிவதில்லையே. ஏன் காற்று இருப்பதாக ஒத்துக் கொள்ளவேண்டும்?.
விரிவாகப் பேசுவோம் இனி வரும் காலங்களில்!
No comments:
Post a Comment