Thursday, April 29, 2010

திருவாரூர் சென்று வருவோம்

                                              (ஸ்ரீ குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்)

                உலகில் மனிதர்களின் தீர்க்க இயலா வியாதிகளைத் தீர்க்கும் ஆலயங்கள் இந்தியாவில் நிறைய உண்டு. நமக்கு அவ்விடங்கள் அனைத்தும் தெரிய வாய்ப்புகள் குறைவே. தெய்வங்களிடம் பலவாறு வேண்டிடினும் இன்னும் தீரவில்லையே என்று வேதனைப்படுவோரும் உண்டு. அவ்வாறு தீர்க்க இயலா வியாதிகளையும் தீர்த்து, நியாயமான வேண்டுதல்களையும் நிறைவேற்றிக்கொள்ள நாம் நாட வேண்டிய இடம்,  ஏசு கிறிஸ்து, நபிகள் நாயகம், புத்தர், மகாவீரர், மற்றும் பலர் தங்கள் வாழ்வை இவ்வுலகிற்கே அர்ப்பணித்து இவ்வுலகம் மேன்மையுற பாடுபட்டு இவ்வுலகம் முழுமைக்கும் பெரும் துணையாய் நிற்கும் மகான்கள் வரிசையில் தமிழகத்திலும் கடந்த காலங்களில் ஆங்காங்கே அவதரித்து மனிதப் பிறவிகளின் துயர் நீக்கி தங்கள் வாழ்வை, வசதிகளைத் துறந்து, உலகியல் சுகங்களைத் துறந்து கடைசி வரை இறைவனின்  உத்தரவை சிரமேற்கொண்டு வாழ்ந்து ஜீவன் முக்தர்களாக இன்றளவும் வாழ்ந்து சாமான்யரின் புறக்கண்களுக்கு  அகப்படாத சித்தர்களாய் உலவிவருகின்றனர்.

                    அந்த வரிசையில், திருவாரூரில் மடப்புரம் எனும் பகுதியில் ஜீவன் முக்தி அடைந்து தம்மை நாடி வரும் பக்தர்களின்  நியாயமான வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றும்  நல்துணையாய் விளங்குதல் திருவாரூர் மற்றும் திருவாரூர் சார்ந்த பகுதிகளில் வாழும்  மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

             பொதுவாக, ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் சரிவர இல்லையெனில் அவரவர்களுக்கு வியாதி ஒரு பிரச்னையாக வரும். என்னதான் மருத்துவம் பார்த்தாலும் அவ்வளவு எளிதில் குணம் பெற முடியாது. எத்தை தின்றால் பித்தம் குணம் பெறும் என்றிருக்கிறது. அதற்குத்தான், பெரியோர், வாழும் காலத்தில் நல்லதைச் செய்யுங்கள், நன்றாய் வாழுங்கள், எவரையும் உடலால் மனதால் புண்படுத்தாதீர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள், மற்றவரை துன்புறுத்தாதீர்கள், அளவோடு பொய் பேசுங்கள், அளவோடு பொருள் சேருங்கள், மாற்றான் மனை நோக்காதீர்கள் என்றெல்லாம் நம் மூதாதையர் காலம்தொட்டு சொல்லிவந்தாலும் அதைக் கேட்டு வந்தோரின் சந்ததிகள் எல்லாம் என்னதான் வாழ்வில் சிரமங்கள் நேர்ந்தாலும் இறைவனின் துணைகொண்டு அச்சங்கடங்களை எல்லாம் தாண்டி நலமுடன் வாழ்தலும், தான்தோன்றித் தனமாய் எதற்கும் வளைந்து தராமல் தவறான செயல்களில் ஈடுபட்டோரின் சந்ததிகள் இன்றளவும் என்னதான் வாழ்வியல் வசதிகள் கொண்டிருந்தும் தீராத நோய்களால் துன்புற்றும், குழப்பமான பிரச்னைகளில் சிக்கித் துன்புற்றும், கவலைகளை கடன்வாங்கி அவதியுறுவதும் இக்காலம் முதல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

                      நான் ஒன்றை பலமாகச் சொல்வேன். நமது பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த பொன், பொருள், நிலம், பணம் என அனுபவிக்கும் உரிமை கொண்டிருக்கிறோமோ, அதே போல அவர்கள் சேர்த்து வைத்த பாவ, புண்ணிய செயல்களுக்கும் நாமும் அனுபவித்தே ஆகவேண்டிய நிலையில் உள்ளோம். இந்த சொத்து என் முயற்சியில் சேர்த்தது அல்ல, எனவே இது எனக்கு வேண்டாம் என்று எவரேனும் சொல்வாரோ? அதே போல் தான் அனைத்தும். அந்தவகையில், இம்மாதிரி பாவச் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டிய சூழலில் தெய்வங்கள் கூட நம்மிடமிருந்து சற்று எட்டியே நிற்கும். ஆனாலும், நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? என்று கேட்டு நீங்கள் உண்மையிலேயே வருந்துவதாக இருப்பின் உங்களின் வேண்டுதலை இறைவனிடம் கொண்டு சேர்ப்பவர் தாம் சித்தர்களாய், ஜீவன் முக்தர்களாய் விளங்கும் இப்பெருமான்கள் ஆவர்.

                 பொதுவாக, ஜீவா சமாதிகளின் முன்பு உண்மை வேண்டுதலுடன் கண்ணீர் விட்டு, மனம் முழுமைக்கும் இறையருள் வேண்டி வணங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஆன்மீகவாதிகளுக்கு நன்கு தெரிந்த ஒன்று. அந்த வகையில் திருவாரூர், மடப்புரத்தில் ஜீவன் முக்தராய் விளங்கும் ஸ்ரீ குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் சன்னிதானம் சென்று அய்யாவை வணங்கி வாருங்கள். தீராத வியாதிகள் எவையும் தீரும் என்பது திண்ணம்.

                       இத்துணை சிறப்பு கொண்ட அய்யாவின் ஜீவசமாதி, திருவாரூர் நகரில், ஸ்ரீ தியாகராஜர் ஆலயத்தின் தெப்பக்குளத்தின் மேற்குப் பக்கமாக உள்ள மடப்புரத்தில் அமைந்துள்ளது. அய்யாவின் இயற்பெயர் அருணாச்சலம். சிதம்பரத்து  ஆடல்வல்லான், நடராஜப் பெருமான், எல்லாம் வல்ல இறைவன் உலகத்தோர் மூலம் அய்யாவுக்கு அறிவித்த பெயர் தாம் "குரு தெட்சிணாமூர்த்தி". அய்யாவின் அருள் கருணைப் பெற்ற பக்தர்களுள் நானும் ஒருவன் என்ற முறையில் என் அன்பை சிறிய அளவிலாவது வெளிக்காட்டி, அய்யாவின் அருட்கருணையை பலரும் பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று வெளியிடும் வாய்ப்பு பெற்றேன்.

ஜீவசமாதி தெய்வங்கள்:  
அய்யாவின் சமாதிக்கு வலது புறமாக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றார். 


நந்தி:

ஐயாவின் சன்னிதானத்தின் முன்புறமாக, அனைத்து சிவத்தலங்களிலும் உள்ளது போல நந்தியம்பெருமானின் சிலை ஐயாவை நோக்கும் விதமாக அமைந்துள்ளது.


மூலவர்:                         
 சன்னதியின் உட்புறமாக குரு தக்ஷிணாமூர்த்தி ஐயா அவர்கள் மூலவராக அருள் தோற்றம் கொண்டு ஜீவ சமாதி நிலையில் உள்ளார். ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். சிறு வயது முதல் முருகப்பெருமான் மீது கொண்ட அன்பால், எல்லாம் வல்ல அவனின் அருளைப் பற்றி பேசினாலோ, எழுதினாலோ என் கண்கள் ஆனந்த கண்ணீரால் நிறைந்துவிடும். அதைப் போல், ஐயா சார்ந்த குறிப்புகளை இப்போது தரும்போது அதே நிலையில் உள்ளேன். இக்குறிப்புகளை வெறுமனே படிப்பவர்களாக அல்லாமல், ஐயாவின் அருளைப் பெறும் பொருட்டு இந்த பிளாகில் வெளியிடப்பட்டுள்ள படத்தினை பிரிண்ட் செய்து வணங்கி வாருங்கள். நீங்களே உணர்வீர்கள். உங்களின் வேண்டுதல்கள் நிறைவேறினால், திருவாரூர் சென்று, ஐயாவின் சன்னதியில் உங்களால் இயன்ற அளவில் அன்னதானம் செய்யுங்கள். 

               
(தொடர்ச்சி)

இன்ப நிலை

செய்யுள் அறிவோம்!

" நெஞ்சகமே கோயில் 
நினைவே சுகந்தம் 
அன்பே மஞ்சன நீர் 
பூசை கொள்ள வாராய் பராபரமே!
அன்பர் பணி   செய்ய என்னை 
ஆளாக்கி விட்டுவிட்டால் 
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!"

எனவே, ஆலயம் சென்று தொழுவோருக்குத்தான் இறைவன் அவர்கள் வேண்டுவன கொடுப்பான் என்றில்லை. தன் மனத்தூய்மையால் இறைவனின் திருநாமம் சொல்லி தன் நெஞ்சத்திலே இறைவனை ஆலயம் கொள்ளச் செய்து வணங்குவோருக்கும் இறைவனின் அருள் கிட்டப்பெரும் என்பதைத் தான் இச்செய்யுள் உணர்த்துகிறது.

Wall Papers Download






குறள்: 6

அதிகாரம்: வழிபாடு
குறள்: 6
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்"  
 
பொருள்: மெய், வாய், கண், செவி, மூக்கு எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

Wednesday, April 28, 2010

எச்சரிக்கை: திருடர்கள்

            சிங்கப்பூர் காவல்துறை YouTube-ல் spf community outreach எனும் தலைப்பில் விழிப்புணர்வு பற்றிய வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் 40 வயது உள்ள ஒருவன் கல்வி மையம் ஒன்றில் திருடும் காட்சியை வெளியிட்டு அதன் மூலம் பொது மக்கள் தங்கள் உடைமைகள், வீடுகளை எப்படிப் பாதுகாக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. 

             வீடியோ காட்சியை பார்க்க விரும்புவோர் கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்யுங்கள். 

வீட்டு முகவர்களிடம் எச்சரிக்கை தேவை

       சமீபத்தில் சிங்கப்பூர் காவல்துறையின் இணையதளம் சென்றேன். பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அண்மையில் காவல்துறையிடம் சிக்கிய போலி வீட்டு முகவர்கள் பற்றிய செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நாள்: 20.04.2010 (செய்தியை அப்படியே மொழி பெயர்த்து வெளியிடுகிறேன்) 
          "நேற்று மாலை, தொடர்ச்சியான வாடகை மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும், 44 மற்றும் 47 வயது நிரம்பிய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
           05.04.2010 அன்று, 40 வயது நிரம்பிய வெளிநாட்டு ஆடவர் ஒருவர், தாம் சிங்கப்பூர்   டாலர் 3,500 அளவில் சந்தேகத்துக்குரிய இரு பெண்களால் ஏமாற்றப்பட்டதாக காவல்துறையினர் வசம் புகார் அளித்திருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட கிளமெண்டி  வட்டார காவல்துறை அதிகாரிகள், இந்த இரண்டு சந்தேகத்துக்குரிய நபர்களைப் பற்றிய புலன்விசாரணையை மேற்கொண்டனர். குற்றவாளிகள் இருவரும் நிரந்தர வசிப்பிடம் கொண்டிருக்காததால் எளிதில் சிக்கவில்லை. கடந்த 19.04.2010, மாலை  06:45  அளவில் ஜூ சியாட் அருகில் ஒரு தங்கும் விடுதியில் வைத்து காவல்துறை அதிகாரிகள், இந்த இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். 
         ஆரம்ப கட்ட விசாரணையில், பிப்ரவரி 2010 முதல், இக்குற்றவாளிகள் டோவர் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியை திருட்டுத்தனமாக வாங்கியுள்ளனர். பின்னர், இதே குடியிருப்பை வாடகைக்கு விடுவதாக இணையதளங்கள் மற்றும் சிறு பிரசுரங்கள் மூலமாக விளம்பரப் படுத்தியுள்ளனர். இவ்விலம்பரங்களைக் கண்ட வெளிநாட்டு நபர்கள் இவர்களை அணுகியுள்ளனர். இவர்களிடம், குடியிருப்புப் பகுதிக்கான முன்வைப்புத் தொகை மற்றும் முன் வாடகைத் தொகை போன்றவற்றைக் கொடுத்துள்ளனர். இவற்றைப் பெற்றுக்கொண்ட  இப்பெண்களை     பணம் கொடுத்தவர்களால் தொடர்பு கொள்ள   முடியவில்லை. இப்படியாக இந்த இரண்டு பெண்களும் மொத்தமாக ஆறு குற்றங்களில் சம்பந்தப்பட்டு, மொத்தம் சிங்கப்பூர் டாலர்கள் 20,000 வரை ஏமாற்றியுள்ளனர் என நம்பப்படுகிறது. 
             இக்குற்றவாளிகள் இருவரும் 21.04.2010 அன்று நீதிமன்றத்தில், மோசடி செய்த குற்றத்திற்காக ஒப்படைக்கப்பட்டிருப்பர். இக்குற்றத்திற்காக இவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை தரப்படும். தண்டத்தொகையும் விதிக்கப்படும்". 
            எனவே, வீடு தேடுவோர் தகுந்த, உரிமம் பெற்ற முகவர்கள்/நிறுவனங்கள் மூலமாக வீடு தேடுங்கள். தேவையற்ற பண விரயத்தையும்,  மன உளைச்சலையும் தவிர்த்திடுங்கள். நேர் வழியே செல்லுங்கள். குறுக்கு வழிகள் சில நேரங்களில் பயன் தந்தாலும், அநேக நேரங்களில் தொல்லைகளையே பரிசாகத் தரும்.
            
* ஆங்கிலத்தில் இச்செய்தியை படிக்க விரும்புவோர் கிளிக் செய்க.

குறள்: 5

அதிகாரம்: வழிபாடு
குறள்: 5 
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" 
பொருள்: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்துகொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வார்கள்.  

தமிழில் பேசுங்கள்

          கடந்த 27/04/2010  அன்று செவ்வாய் கிழமை பொத்தோங் பசிர் MRT அருகில் உள்ள  சிவதுர்கா ஆலயம் சென்றிருந்தோம். அருள்மிகு சோமநாதர், அருள்மிகு துர்கையம்மன், அருள்மிகு விநாயகர், அருள்மிகு முருகன், அருள்மிகு தட்சணாமூர்த்தி, அருள்மிகு பிரம்மன், அருள்மிகு சுந்தரவள்ளி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நாயன்மார்கள், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களை வணங்கி பிரசாதம் பெற்றுக்கொண்டு கோயிலின் வலப்புறம் உள்ள அன்னதான இடத்தில் வந்து அமர்ந்தோம். அதுவரை தமிழில் பேசிக்கொண்டிருந்த தமிழ் பெண்மணிகள் எங்களைக் கண்டதும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர். 
 
         எனக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சமீபத்தில் ஒலி 96.8 ல் "தமிழர் அனைவரும் தமிழரிடத்தில் தமிழில் பேசுங்களேன்" என்று கேட்டுக் கொண்டதை எவ்வளவு மதிக்கிறார்கள் என்று. 

Tuesday, April 27, 2010

குறள் - 4


அதிகாரம் - வழிபாடு 
குறள் - 4
வேண்டுதல்வேண்   டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல
பொருள்: 
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. 
 
எளிதில் எவரையும் நம்பி விடாதீர்கள். நம்பிக்கைக்கு உரியவராகி விட்ட பின் நம்புங்கள், சந்தேகம் கொள்ளாதீர்கள். 

அபிஷேகம், அபிஷேகம்

            

              சமீபத்தில் முருகனைப் போற்றிப் பாடும் பாடல் ஒன்று கேட்கும் வாய்ப்பு பெற்றேன். அதில் முருகப் பெருமானுக்கு செய்யும் பலவகை அபிஷேகங்களால் கிடைக்கப்பெறும் பலன்களை பட்டியல் இட்டு உள்ளனர். அதன் வழி, எம்பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து அன்பர்கள் உய்திட என்னால் இயன்ற இவ்வெளியீட்டைத் தருகிறேன். 
  •  எள் நீர் - பிணி விலக்க  
  • இளநீர் - யோகம் கிடைக்க  
  • எலுமிச்சை - அச்சம் அகற்ற 
  • மாங்கனிச்சாறு - வெற்றி பெற
  • கரும்புச் சாறு - தேகக்கட்டு பெற 
  • பால் - ஆயுள் பலம் பெற 
  • தயிர் - நன்மக்கட்பேறு 
  • நெய் - வீடுபேறு 
  • கொம்புத்தேன் - தேன்  குரல் கிடைக்க 
  • பஞ்சாமிர்தம் - செல்வம் குவிக்க 
  • நறுமஞ்சனம் - கடன் தொலைக்க 
  • சந்தனம் - புகழ் பெற 
  • பன்னீர் - கல்விச்செல்வம் பெற 
  • திருநீறு - மூவுலக நலம் பெற 
  • சொக்கத் தங்க அலங்காரம் - பெரும் லாபம் பெற 
இதை வெளியிட்டே ஆகவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று அதற்குரிய வாய்ப்பு கிடைத்தது. பயன்படுத்திக் கொண்டேன்.

இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய கீழ்க் காணும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்.

Monday, April 26, 2010

தைப்பூச காவடி காட்சிகள்(மொரிஷீயஸ்)

 கடந்த தைப்பூசத்தின் போது மொரிஷீயஸ் நாட்டில் முருக பக்தர்கள் மேற்கொண்ட காவடி பிரார்த்தனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சமீபத்தில் காணும் வாய்ப்பு பெற்றேன். அதனை இந்த பிளாகில் இணைத்துள்ளேன். அன்பர்கள் கண்டு, முருகனின் அருள் கிடைக்கப் பெறுவீர்களாக.

வீடியோ 1

வீடியோ 2 

வீடியோ 3  

ஸ்ரீ மலைக்கோயில் முருகன் ஆலயம்

                  



               முருகன் என்றால் அழகு, அழகு என்றால் முருகன். முருகன் கலியுகத் தெய்வம். முருகன் மீது  கடவுள் எனும் நிலையையும் தாண்டி அவன்பால் அன்பு கொண்டோருக்கெல்லாம் அவன் தம் திருவிளையாடல்கள் அறிந்திருப்பர், உணர்வால் தெரிந்திருப்பர், தெளிந்திருப்பர். முருகனைப் போற்றி பலப் பல பெரியோர் , பல்வேறு கால கட்டங்களில் தமிழ் இலக்கியங்களில் பாடி வைத்துள்ளனர். தமிழ் என்றால் அனைவருக்கும் நினைவில் தோன்றும் ஒரு பெயர் முருகன் எனும் அழகு தெய்வமே. தம் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் அவன். ஆபத்து எப்போதெல்லாம் அடியவர் வாழ்வில் குறுக்கிடுகிறதோ, அப்போதெல்லாம் "முருகா" , என்று அழைப்போருக்கும், நினைப்போருக்கும் எந்த ஒரு ஆபத்தையும் வேரறுக்கும் அன்புத் தெய்வம்.

                 ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முருகனின் பக்தர்கள், அடியவர்கள் உலகெங்கும் உண்டு. இதை நான் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியம் இல்லை என்பதும் எனக்கு தெரிந்த ஒன்றே. முருகன் மீது அனுதினமும் அன்பு கொண்டு விளங்கும் ஆன்றோர்கள், அடியவர்கள் உலகெங்கும் எம்பெருமானின் சிறப்பை வெளிகாட்டும் விதமாக தாம் வாழும் நாடுகளில் புதியதாகக் கோயில்கள் கட்டுவித்தும், ஏற்கனவே உள்ள கோயில்களின் பராமரிப்பை மேற்கொண்டும், தொன்மை நிறைந்த கோயில்களுக்கென பொருளுதவி செய்தும் தங்கள் அன்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், மலேசியாவைச் சார்ந்த திரு.சேந்தன், திருமதி.வள்ளி தம்பதியர் உலகெங்கும் உள்ள முருகன் கோயில் கொண்டுள்ள ஆலயங்களுக்கு யாத்திரைகள் மேற்கொண்டு  அந்த ஆலயங்கள் பற்றிய புகைப்படங்கள், வரலாறு, முருகன் பற்றிய பாடல்கள், தமிழ்ப் பாடல்களின்  ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புக்கள் என தங்களின் இணைய தளத்தில் மிக நீண்ட காலமாக வெளியிட்டு வருகின்றனர். முருகன் மீது அன்புகொண்டு வாழும் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு தளம் இது. 

            சிங்கப்பூரிலும் முருகனுக்கென்று பல ஆலயங்கள் உள்ளன. அதில் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், அருள்மிகு முருகன் ஆலயம், ஸ்ரீ மலைக்கோயில் முருகன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் புகிட் பஞ்சாங் அருகில் திருக்குன்றத்தின் மீது ஆலயம் கொண்டிருக்கும் முருகனைத் தரிசிக்கும் பெரும்பேறு கிடைத்தது. இடப்பாகத்தில் தந்தை, தாயாரோடும், வலப்பக்கத்தில் சகோதரருடனும், வள்ளி தெய்வானை சமேதராக திருக்காட்சி தரும் முருகப்பெருமானை வணங்கி மகிழும் பெரும்பேறு பெற்றேன். அதுவரை, கடந்த பிப்ரவரி 14 நள்ளிரவு ஏற்பட்ட லாரி விபத்தில் எனது சகோதரனை (எனது அம்மாவின் சகோதரி மகன்) இழந்து, அதனால் ஏற்பட்ட சோகத்தை மறக்க இயலாமல், தினம் தினம் தவித்துக் கொண்டிருந்த வேளையில், முருகனின் ஆலயம் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அன்று முதல், என் மனதில் அழுந்தியிருந்த சோகம் ஒரு வழியாய் விடைபெற்றுப் போனது. இதெல்லாம் பிரமை என்று சொல்ல முயற்சிக்கும்  நாத்திக வாதிகளுக்கு  பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

              குறிப்பிடத்தக்க விதமாக, சமய, இன நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்றும்படியாக ஆலயத்தின் கீழ்பக்கமாக சீன மக்களின் தெய்வமும், புத்தர் சன்னதியும், மற்றும் பிள்ளையார், பக்த ஆஞ்சநேயர், ராகவேந்திரர், திருமலை பெருமாள், விஷ்ணு, அன்னபூரணி, துர்கை அம்மன், நர்த்தன விநாயகர், ஐயப்பன், அரச மரம் உடனான நாகலிங்கம், காளி அம்மன், முனீஸ்வரர், விநாயகர் சன்னதிகள் உள்ளன. ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தளத்தில் நவக்கிரக சன்னதியும் இடம் பெற்றுள்ளது.

தேக்காவில் இருந்து முருகன்  திருக்குன்றம் செல்ல விரும்பும்   பக்தர்கள் புகிட் திமா சாலையில் உள்ள (லிட்டில் இந்தியா MRT அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து எண். 67 , 170 ஆகிய பேருந்துகள் மூலம் சென்றடையலாம். ஆலயத்தின் மிக அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. புதிதாக செல்வோர் புகிட் பஞ்சாங்  LRT வளைவை அடையாளமாகக் கொள்ளலாம்.

கோயில் செல்லும் வழி வரைபடம் 

கோயிலின் இணையதளம்  

முருகன் பாடல்கள்

குறள்: 3


அறத்துப்பால் 
அதிகாரம்: வழிபாடு  

" மலர்மிசை ஏகினான்  மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்".
 
பொருள்: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ் வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

Sunday, April 25, 2010

MOM Guide

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழிகாட்டி நூல் (மார்ச் 2010 வரை) என  தமிழ் & ஹிந்தியில் மனிதவளத்துறை அமைச்சகத்தால் (Ministry of Manpower)  வெளிடப்பட்டுள்ளது. இந்த கையேடு சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர் அனைவருக்கும் துணைபுரியும் என்ற நம்பிக்கையில் வெளியிடுகிறேன். 

கையேட்டில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் எதுவும் மாறாமல் வெளியிடுகிறேன்.

சிங்கப்பூருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக 
பல்வேறு பண்பாடுகளும் மொழிகளும் கலக்கும் நாடான சிங்கப்பூருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக.

சிங்கப்பூருக்கு நீங்கள் வேலை செய்ய வருவது இதுவே முதல் முறை எனினும், அனைத்தும் பழக்கமற்றவை எனினும், கவலை வேண்டாம். இங்கு உங்கள் வேலைச் சூழலை மற்றும் வாழ்க்கைச் சூழலை எவ்வாறு ஏற்பது, அவற்றுடன் எவ்வாறு இசைந்து செல்வது என்பவை பற்றி இவ்வழிகாட்டி நூல் உங்களுக்குக்கான தகவல்களை அளிக்கும்.
இந்த வழிகாட்டி நூல் பற்றி 
நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்யும் போது உங்கள் வேலை உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள, தகவல்கள் நிறைந்த இவ்வழிகாட்டி நூல் உங்களுக்கு உதவி செய்யும். உதவிக்கான வழிகள், எடுத்துக்காட்டாக மனித வள அமைச்சு, காவல்துறை போன்றவற்றின் பயனுள்ள தொலைபேசி எண்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை, இவ்வழிகாட்டி நூலில் நீங்கள் காணலாம். 

சிங்கப்பூரில் வேலை செய்தல் 
சிங்கப்பூரில் வேலை செய்யும் எல்லா வெளிநாட்டவரும் செல்லுபடியாகும் வேலை அனுமதியை வைத்திருக்க வேண்டும்.வேலை அனுமதியுடன் இணைந்த பல்வேறு வேலை அனுமதி நிபந்தனைகளுக்கு நீங்கள் கீழ்படிந்து நடக்க வேண்டும். நீங்கள் இங்கு வேலை செய்யும் போது வேலை நிபந்தனைகள் மட்டுமில்லாமல் சிங்கப்பூர் சட்ட விதிகளையும் பின்பற்றி நடக்க வேண்டும். 

உள்ளூர் ஊழியர்களைப்  போன்றே, சிங்கப்பூரில் உள்ள எல்லா வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூரின் வேலைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்ட விதிகளால் சமமாகப் பாதுகாக்கப்படுவர். வெளிநாட்டு ஊழியர்களை மோசமாக நடத்துகின்ற அல்லது தவறாகப் பயன்படுத்துகின்ற முதலாளிகள் தண்டிக்கப்படுவர். 

பயன்மிக்க வேலை அனுபவம் பெற்றிடுவீர் 
சிங்கப்பூரில் வேலை செய்வது மிகுந்த ஆதாயம் தரும் அனுபவமாக இருக்க முடியும். புதிய சூழலுடன் ஒத்து செல்வது துவக்கத்தில் உங்களுக்கு கடினமாக இருக்கலாம். திறந்த மனதுடன் நேர்மறையாக இருப்பது புதிய மாற்றங்களை எளிதாக ஏற்றுக்கொள்வதற்கு உதவி செய்யும். 

உங்கள் தாய்நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் பலர் சிங்கப்பூரில் வேலை செய்வதை நீங்கள் காண்பீர்கள்: வேளையில் விரைந்து உங்களை ஈடுபடுத்திக் கொள்ள அவர்கள் உதவக் கூடும். வேலையிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி உடன் வேலை செய்பவர்களிடம் நீங்கள் அறிவுரை நாடலாம், அல்லது நீங்கள் இங்கு தங்கியிருப்பதை மேன்மையுடையதாக  ஆக்கும் வகையில் விடுமுறை நாட்களின் போது அவர்களுடன் கலந்து பழகலாம்.

வேலை அனுமதி நிபந்தனைகள் 
உங்களுக்கு வேலை அனுமதிச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் சட்டப்படி சிங்கப்பூரில் வேலை செய்யலாம். வேலை அனுமதிச் சீட்டு பெற்றவர் என்ற முறையில், இவ்வுரிமைகளில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குக் கீழ்படிந்து நீங்கள் நடக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் பின்வருமாறு: 
(i)
  • வேலை அனுமதிச் சீட்டில் குறிக்கப்பட்டுள்ள வேலை மற்றும் முதலாளியிடம் மட்டுமே நீங்கள் வேலை செய்ய முடியும். 
  • வேறு எந்தத் தொழிலிலும் நீங்கள் ஈடுபடக் கூடாது: அல்லது உங்கள் சொந்தத் தொழில் துவங்கக் கூடாது. 
  • வேலையைத் துவங்கும் போது உங்கள் முதலாளி அளித்த முகவரியில் மட்டுமே நீங்கள் தங்க அனுமதிக்கப்படுகிறீர்கள். உங்கள் முகவரியை மாற்றினால், உங்கள் முதலாளிக்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.
  • சிங்கப்பூரில் பதிவு செயயப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் நீங்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நீங்கள் வேலைக்குத் தகுதியற்றவர் என மருத்துவச் சான்றிதழ் அளிக்கப்பட்டால், உங்கள் வேலை அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும். 
  • அசல் வேலை அனுமதிச் சீட்டை நீங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும்; அரசாங்க அதிகாரி யாரேனும் சோதனைக்காக கேட்டால் அதனைக் காட்ட வேண்டும். 

(ii) நடத்தை

  • வேலை அனுமதி ஆணையாளரின் ஒப்புதல் இன்றி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரையோ நிரந்தரவாசியையோ சிங்கப்பூருக்கு உள்ளே அல்லது வெளியே நீங்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது. உங்கள் வேலை அனுமதி முடிந்த பின்னரும், நீக்கப்பட்ட அல்லது ரத்து செயயப்பட்ட பின்னரும்  கூட இது பொருந்தும். 
  • நீங்கள் வேலை அனுமதி ஆணையாளரின் அனுமதியுடன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரை அல்லது நிரந்தரவாசியை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டிருந்தால் ஒழிய சிங்ககப்பூரில் வேலை செய்யும்போது தாய்மை அடைவதோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதோ கூடாது. உங்கள் வேலை அனுமதி முடிந்த பின்னரும், நீக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட பின்னரும் கூட இது பொருந்தும். 

(தொடரும்)




குறள்: 2

அறத்துப்பால் 
அதிகாரம்-வழிபாடு 

" கற்றதனால் ஆய பயனென்கொல்  வாலறிவன் 
நற்றாள் தொழா அர்  எனின்
பொருள்:
தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லையெனில், என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆம்தானே?
ஆயிரம் கற்றென்ன பலன்?
அறிவாளர் முன்னே அறிவிலியாய்
பணிவின்றி நடந்து கொள்வதால்.  

Saturday, April 24, 2010

தினம் ஒரு திருக்குறள்

தமிழில் தோன்றிய தொன்மை இலக்கியங்களில் திருக்குறள், உலகப் பொதுமறையாய்க் கருதப்படுகிறது. உலகம் சார்ந்த தத்துவங்களை ஒன்றே முக்கால் அடிகளுக்குள்ளாக வைத்து எளிமையாய் தந்தவர் திருவள்ளுவர். உலகின் பல்வேறு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளனர் என்பதை உணரும்போது திருக்குறளின் சிறப்பை அறியலாம். இதனால், தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம். என் கடமை என்கிறபோது இனி 1330 குறள்களையுமே தினம் ஒரு குறள் என்ற விகிதத்தில் இந்த பிளாகில் வெளியிட உள்ளேன். படித்து மகிழுங்கள். 
அறத்துப்பால்
குறள்: 1  
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
".
பொருள்: 
'அ'எனும் எழுத்து மற்ற எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையாய் விளங்குதல் போல ஆதி பகவன் எனும் இறைவன் உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் முதன்மையாய் விளங்குகிறான்.  


Monday, April 19, 2010

அன்புக்குரியவளே!

திருமணம் ஆன பின்பு வேலைவாய்ப்புக்காக வெளி நாடு செல்லும் நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் பிரிவு ஆற்றாமையை சொல்லியுள்ளேன்.

'' அன்புக்குரியவளே!
இந்த அன்பிற்கே உரியவளே!
இதோ உன்னவனின் காதல் வரிகள்.
முடிவில்லா தொலை தூர பயணமாய் ஓடிக்கொன்டிருந்தவன்
அன்று முகவரி தேடிக் கொண்ட நாள்
நம் இரு மன இணைவு கண்ட திருமணம்!

ஆயிரம் சொத்துக்கள் அடைந்தென்ன
இருக்கும் லாபம் ?
உறவுகளின் பகையும், உயிர் பயமும் தானே?
எனக்கென்று பிறந்த உன் நினைவில்
சலனமற்று உறங்குவதிலும்
எத்தனை சுகம்... சுகம்!

எத்தனை நாட்களை அன்பே
வீணடித்துவிட்டேன்?
காதல் தெய்வம் உன்னை எனக்கு
முன்பே காட்டிவிட்டிருக்கக் கூடாதோ பெண்ணே?

இருவரும் என்று அன்பே
இணைந்திருப்பது ?
நெஞ்சக்கூட்டில் சில வேளை
வேதனை முட்கள்
கீறிடும் காயம்
எந்த மருத்துவத்தால் ஆற்றுவேன்? 

ஆறு தாண்டிச் சென்றாலும்
துயரம் கொண்டவன்
கடல்கள் தாண்டி
காசுகள் சேர்த்து
கலங்கிக் கொண்டிருக்கிறேனே!

வயதைத் தொலைத்து,
வாழ்வு சுகங்கள் தொலைத்து
சிகரம் எட்டுவேன் என்று
சிந்தித்துக் கிடப்பதில்
மகிழ்ச்சி என்ன கிடைக்கிறது?

என்னே வாழ்க்கை!
நரகத்தை, வாழும் காலத்தே
கைப்பிடித்து,
கட்டிப்பிடிக்கத்தான்
திரைகடல் வசனம் சொன்னார்களா
செந்தமிழ் நாட்டிலே?

காத்திரு! காத்திரு!!
கலங்காமல் காத்திரு!
உன் கரங்களைப் பற்றிக்கொண்டு
நம் காதலை மெருகேற்றும்
பொன்மாலை பொழுதுகளுக்காய்! (2005)





Sunday, April 18, 2010

சிங்கப்பூரின் இரயில் சேவை வழித்தடங்கள்1

ஹார்பர் ஃபிரண்ட்  முதல் புங்கோல் வரை செல்லும் வடகிழக்கு ரயில் சேவை வழித் தடங்கள்:

உற்சாகம் தாருங்கள்!

"என் இனிய தமிழ் மக்களே! பாசத்துக்குரிய பாரதி ராஜா பேசுகிறேன்", என்று நான் சொல்லமாட்டேன். ஆனாலும், தமிழ் மொழிக்கு, தமிழரின் மொழிக்கு என்னால் இயன்ற ஒரு கடுகளவு சேவையை செய்திடவே முனைப்பு கொண்டு இந்த பிளாகை தொடர்கிறேன். தப்பித் தவறி என் பிளாகில் வருகை தரும் தமிழ் நெஞ்சங்கள் கொஞ்சம் என்னை உற்சாகப் படுத்துங்கள். அதன் மூலம், என்னால் இயன்ற தமிழ்ச் சேவையை இன்னும் கொஞ்சம் அதிகம் செய்திட இயலும்.

உங்களின் விமர்சங்களை எனது இ-மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.
எனது முகவரி:
softwaresuniverse@gmail.com

வளைந்து கொடுங்கள்!

            ஒரு கவிதையில் நான் இப்படிச் சொன்னதுண்டு.
" வளைந்து கொடுக்கும் நாணலுக்குத் தான் வாழ்வு காலம் அதிகம்.
நீண்டு வளரும் முருங்கைமரக் கிளைகளுக்கு அல்ல", என்று. 

          கவிதை என்று பிதற்றுகிரானே என நினைக்கிறீர்களா? என் போன்று மிகப் பலர் கவிதை உள்ளம் கொண்டிருந்தும் வெளிப்படுத்த வாய்ப்புகள் இன்றி, வெளிப்படுத்தும் வளர்ப்புகள் இன்றி, வாழ்க்கைப் பாதையில் முட்களையே மிதித்துக் கொண்டு காலத்தின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறோம். எங்களை உற்சாகப் படுத்தும் அளவிலாவது எவ்வகை கவிதையாக வேண்டுமானாலும் (புதுக்கவிதை/மரபுக்கவிதை) எடுத்துக்கொண்டு அடுத்த வரிகளுக்குள் புகுவோமே. 
       'இன்றைய உலகம் எப்படிப்பட்டது', என்ற வர்ணனை வேண்டாம் என்று நினைக்கிறேன். நான் இப்படித்தான் என்று சொல்லும் தைரியம், பக்குவம் அதற்கேற்ற வசதிவாய்ப்புகள் இருப்போர் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். என்னை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. நான் இதைத் தான் படிப்பேன், நான் இப்படித்தான் ..............., நான் இப்படித்தான்................., நான் இப்படித்தான்............... ஒன்றைச் சொல்லியாக வேண்டும். 
           ஒரு குழந்தை தன் தாயைத்தான் சார்ந்து வாழ முடியும்.
           ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் சார்ந்து வாழ முடியும். 
         ஒரு பக்தன் என்பவன் கடவுளைத் தான் சார்ந்து வாழ முடியும். 
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சில விதிவிலக்குகளைப் பற்றி கவலை வேண்டாம். இயற்கையின் நியதி என்று ஒன்று உண்டு. இந்த தத்துவம் இப்படித்தான் செயல்படவேண்டும் என்று முறை இருக்கிறது. எனவே, வாழ்வில் வளைந்து கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கிறார்களே  தவிர வீண் போனதில்லை. 

                    ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் வளைந்து கொடுக்கிறான் என்றால் இங்கே பணிவைக் குறிக்கிறது. வேறு வகையில் பொருள் கொள்ளாதீர்கள். அப்போதுதான் அம்மாணவன் தன் ஆசிரியரிடம் நிறைய தகவல்கள், அதாவது கல்வி மற்றும் நடைமுறை உலகம் சார்ந்தவைகளை கற்றுக்கொள்ள முடியும். 

                 ஒரு மனைவி/கணவன் தன் கணவன்/மனைவிக்கு வளைந்து கொடுக்கும் போதுதான் குடும்ப வாழ்வு இனிக்கிறது. அதற்காக அளவுகளை மீறிப்போக வேண்டிய அவசியமில்லை. 

        எனவே, வளைந்து கொடுங்கள் நாணலாக! எந்த துன்பமும் உங்களை துன்பப் படுத்தாது.


இ-மெயில்

                      இணையத்தில் இலவசமாக கிடைக்கக் கூடிய இ-மெயில் முகவரிகளையே நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். இந்த இ-மெயில்கள் மூலமாக உலகின் எந்த மூலைக்கும் எழுத்து வடிவிலான செய்திகள், படங்கள், நகல்கள் அனைத்தும் பல்வேறு நோக்கங்களுக்காக அனுப்புகிறோம்/பெறுகிறோம். பெரும்பான்மை இ-மெயில் சர்வர்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று சொன்னாலும், Gmail, Yahoo, Hotmail ஆகிய நிறுவனத்தார் நமக்கென்று உள்ள இ-மெயில் முகவரிக்குள்ளாக எழுத்து வடிவத்திலும், படங்கள் வடிவத்திலும் ஹைப்பர் லிங்க் என்று சொல்லக் கூடிய இணைப்புகள் மூலமாக விளம்பரங்களை வைத்துவிடுகின்றனர். நமக்கு இ-மெயில் உபயோகத்தை இலவசமாகத் தருகிறோம் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள், கணக்கிட முடியாத  அளவில் விளம்பரங்களின் மூலமாக சம்பாதிக்கின்றனர் என்பதே உண்மை. இது ஒரு வியாபார உத்தியே.

                        அதே வேளை, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் சந்தாவாகக் கட்டினால் எவ்வித வியாபார விளம்பரங்களும் இல்லாத, நம் கணினியிலேயே இருக்கும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அல்லது மற்ற இ-மெயில் சாப்ட்வேர்கள் மூலமாக இ-மெயில்கள் பெறும்/அனுப்பும் வசதியையும், மற்ற பல சிறப்புகளும் அடங்கிய இ-மெயில் வசதியை நாம் பெறலாம். அந்த வகையில் சிங்கப்பூர் நிறுவனமான சொஷியல்மேடிக்  எனும் நிறுவனம் மற்ற முன்னணி நிறுவனங்களை  விட குறைந்த விலையில் இம்மாதிரி இ-மெயில் வசதியைத் தருவதாகச் சொல்கின்றனர். 

                        விருப்பம் உள்ளோர் பயன்படுத்திப் பாருங்களேன்! 


Thursday, April 15, 2010

கடவுள் இருக்கிறானா?

கடவுள்  இருக்கிறானா? மனிதன் கேட்கிறான்...
அவன் இருந்தால் பூமியிலே எங்கே வாழ்கிறான்? - இந்த பாடல் பலரும் கேட்டிருக்கக் கூடும். பலரும் தங்கள் வாழ்க்கை பாதையில் மிகப் பலமுறை தங்கள் மனதுக்குள் கேட்டுக்கொண்டிருக்கக்  கூடும். ஒவ்வொரு முறையும் நம்மால் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலைகளில் கடைசி ஆயுதமாக இறைவன் என்னும் ஒரு பெரிய சக்தியைத்தான் சரணம் அடைகிறோம். சிலருக்கு வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறும். சிலருக்கு, அழுது புரண்டாலும் ம்ஹூம்,, வாய்ப்பே இருக்காது.  நினைத்தது நடந்தால் கடவுள் இருக்கிறான் என்பதும், நினைத்தது நிறைவேறவில்லை என்றதும், கடவுளா? அது யார் என்று கேட்பதுவும் நடக்கத்தான் செய்கிறது. உண்மையில் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? அவரின் உருவம் தான் என்ன? அவர் எங்கே இருக்கிறார்? அவரைப் பார்க்கத்தான் முடியுமா? அவருக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இருக்கிறதா? அவருக்கு பிடித்த சாதி எது? அவருக்கு பிடித்த மதம் எது? என்பன போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கும் அவரவர் மனநிலை, அறிவு, வயது ஆகிய இவற்றுக்கு ஏற்றாற்போல தோன்றும். இதற்கான விடைகளை நம் பெரியவர்கள் பல தரப்பட்ட கால கட்டங்களில், அவரவர் தம் உணர்தல் மூலமாக இவ்வுலகிற்கு உணர்த்தியுள்ளனர். 

              கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினரும், அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்று ஒரு பிரிவினரும் சில வழிமுறைகள், கோட்பாடுகள், நிகழ்வுகள் மூலமாக நிரூபித்துக் கொண்டும் வாதிட்டுக் கொண்டும் இருக்கின்றனர். கடவுளின் இருப்பு நிலை குறித்து வாதிடும் தத்துவம் ஆத்திகம் என்றும், எதிர்நிலையை நாத்திகம் என்றும் சொல்கின்றனர். 

         இங்கே  நம்பிக்கையை மிக முக்கியமாகக் கொள்ள வேண்டும்.  சிலர் வேண்டுமானால் அறிவார்ந்த முறையில் சொல்லலாம். "இதோ என் தாய் இன்னார், தந்தை இன்னார்  என்று என் கண்களுக்குத் தெரிகிறது, அதனால் அவர்கள் இருக்கிறார்கள். கடவுள் என்ற ஒருவரை என் கண்களுக்குத் தெரிவதே இல்லையே. புறக் கண்களுக்குத் தெரியாத ஒருவரை, ஒன்றை எப்படி இருப்பதாக ஒத்துக்கொள்ள முடியும்?" என்று  நீங்கள் கேட்கலாம். அதற்கு பதிலாக, காற்றை நம்மால் பார்க்க முடியாது. காற்று இருப்பதாக உணர்கிறோம். உயிர் வாழ காற்று (ஆக்சிஜன்) மிக அவசியம் என்று தெளிவும் பெறுகிறோம். காற்றைத்தான் நம்மால் காண முடிவதில்லையே. ஏன் காற்று இருப்பதாக ஒத்துக் கொள்ளவேண்டும்?. 

             விரிவாகப் பேசுவோம் இனி வரும் காலங்களில்!

Tuesday, April 13, 2010

அவள்!

"அவள்,
தேதிகள் கிழிந்தபின்னும்
தேய்ந்து போகா வண்ணப்படம்.
கண்ணழகி போட்டி வைத்தால்
கனகாவுக்கும் கடைசி பரிசுதான்"

ஊதுபத்தி!

" எரியும் போது
மணமாக, நறுமணமாக.
எரிந்து முடிந்தபின்னே
சாம்பலாக.
ஆம்.
மனிதனும் ஒரு ஊதுபத்திதானே!".
                                                 (1997 )

ஜாதி!

" தென்னங்கீற்றைத் தழுவும்
தென்றல் காற்றும் கூட
என்ன ஜாதி என்றா கேட்டது?
பூவுக்கும் வண்டுக்கும் இடையில்
புதியதோர் தடைச் சட்டம்
பூமியில் யார் போட்டது?"
                                          (1997 )

Saturday, April 10, 2010

திருத்தலங்கள் - ஒரு பார்வை

இப்பகுதியில் தமிழகத்தின் சில கோயில்கள் பற்றிய குறிப்புகளைத் தரலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில், தமிழகத்தின் காவிரி நதிக்கும் வடகரைச் சிவத் தலமான பூம்புகார் அருகாமை சாயாவனம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ குயிலினும் இன்மொழி அம்பிகை சமேத ஸ்ரீ சாயாவனேஸ்வரர்  ஆலயம் குறித்து அறியலாம். 

இந்தியாவில் நிறைய புண்ணியத்தலங்கள் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். காசி ஒரு புண்ணியத் தலம் என்பதும் நிறைய பேர்களுக்கு தெரியும். சாயாவனத் தலமும் காசிக்கு இணையானது என்பது பலரும் அறிய வாய்ப்பில்லை. 

இத்தலம் குறித்து அறிய கீழ்க்காணும் இணைப்பைக்  கிளிக் செய்து பாருங்கள்.
 

Sunday, April 4, 2010

சிங்கப்பூரின் இரயில் சேவை வழித்தடங்கள்

ஜுகூன் முதல் சாங்கி விமான நிலையம் வரையில் இரயில் சேவை உள்ளது. இது கிழக்கு-மேற்கு வழிச் சேவையாகும். சாங்கி விமான நிலையம் செல்வோர் பாசிர் ரிஸ் செல்லும் இரயிலில் பயணித்து தானா மேரா ரயில் நிலையத்தில் மாறி சாங்கி செல்லும் ரயிலில் பயணிக்க வேண்டும்.

ஜூகூன் முதல் பாசிர் ரிஸ் செல்லும் வழியில் அமைந்துள்ள ரயில் நிலையங்கள்:
 (குறிப்பு: அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளவை நிமிடங்கள் ஆகும்) 
  1. ஜுகூன்(64)
  2. பயனியர்(60)
  3. பூன் லே(58)
  4. லேக் சைடு(56)
  5.  சைனீஸ் காடன்(54)
  6. ஜூரோங் ஈஸ்ட் (52)
  7. கிளமெண்டி(48)
  8. டோவர்(46)
  9. புவனவிஸ்தா(44)
  10.  காமன்வெல்த்(42)
  11. குயின்ஸ் டவ்ன்(40)
  12. ரெட் ஹில்(37)
  13. தியாங் பாரு(35)
  14. அவுட்ரம்பார்க்(33)
  15. தஞ்சோங் பஹார்(31)
  16. ரேபிள்ஸ் பிளேஸ்(29)
  17. சிட்டி ஹால்(27)
  18. புகிஸ்(25)
  19. லேவெண்டேர்(23)
  20. காலாங்(22)
  21. அல் ஜுநிட்(19)
  22. பயா லேபர்(18)  
  23. யுனோஸ்(16)
  24. கேம்பாங்கான்(14)
  25. பிடோக்(11)
  26. தானா மேரா(9)
  27. சிமெய்(5)
  28. டேம்ப்னிஸ்(3)
  29. பாசிர் ரிஸ் 
 தானா மேரா முதல் சாங்கி செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்கள்:
  1. தானா மேரா
  2. எக்ஸ்போ
  3. சாங்கி விமான நிலையம் 
* நன்றி: www.publictransport.sg
 

சிங்களர்கள் எங்களோட கஷ்டங்களைப் பார்க்க சந்தோஷமாக வர்றாங்க!

சமீபத்தில் குமுதத்தில் (31.03.2010) படித்தது. குமுதத்தை படிக்காத தமிழ் மனங்களின் பார்வைக்கு என வெளியிடுகிறேன். ஒரு தமிழன் என்ற முறையில் இப்படியாவது என் உணர்வை காட்டிக்கொள்கிறேன்.

இக்கட்டுரை வன்னியிலிருந்து தீபச் செல்வன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

" கிளிநொச்சியை  விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது இருந்த செழிப்பையும், வலிமையையும் நான் நினைவு கொண்டு பார்க்கிறேன். ஆனால், இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. இராணுவ மயமும், இராணுவ வீரர்களின் நடமாட்டமும் என அங்கு பயங்கரமாகத்தான் மிகுந்திருக்கின்றது. 

         எனக்கு சிறிய வயதிலிருந்தே தெரிந்த ஒரு அக்கா, அவர்கள் 1990 ல் இடம் பெயர்ந்தவர்கள். பின்னர், 1996 லும் இடம் பெயர்ந்து எங்களுடன் வந்து இருந்தவர்கள். அந்த அக்காவின் கணவர் 2001 ல் நடைபெற்ற சமர் (போர்) ஒன்றில் வீர மரணமடைந்தார். அப்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. பின்னர், அவருக்கு மறு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இன்று அவரைப் பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது. ஒரு கண்ணை இழந்து உடல் முழுவதும் காயத்துடன் மரத்தின் கீழாக சமைத்துக் கொண்டிருந்தார். 
        அவருக்கு இரண்டாவது திருமணத்தின் பொழுது பிறந்த குழந்தையும், மூத்த குழந்தையும், கணவனும், சகோதரனும் இறுதி யுத்தத்தில் பலியாகியிருந்தனர். அவரது தலையுள்ளும் ஷெல்   துண்டுகள் எடுக்கமுடியாது இருக்கின்றன. இழப்புகளும், அழுகைகளும் என்றும், இன்றும் தனித்து போயிருக்கின்றது. சகோதரனை இழந்த துக்கத்தில் எப்பொழுதும் அழுது புலம்பும் தாயுடன் அவர் சிதைந்து போன வீட்டை மீள பொறுக்கிகே கட்டிக்கொண்டிருக்கிறார். இதுவரையில் அவர் விடுதலை ஆகவில்லை. தடுப்பு முகாமில் இருந்து இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்க அனுமதி கேட்டு வந்த அவர் மறு நாள் தடுப்பு முகாமிற்கு திரும்ப வேண்டும். 

             தனக்கு கண்கள் வேண்டாம் என்று கூறிக்கொண்டே இருந்தார். வாழ்வைத் தொடங்க, வாழ பிடிப்பற்று பேசிக் கொண்டு இருந்தார். தன் குழந்தைகளைப் பறிகொடுத்த வேதனைகளை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த குழந்தைகளின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். இவரைப் போல், எத்தனையோ சகோதரிகள்......

               சமர்கள்  நடந்த இடம் என்பதால் மண் முட்டைகளும், மண் அரண்களும் எங்கும் கிடக்க குண்டுகளில் நிலம் எரிந்து போயிருந்தது. அந்த நிலத்தில் என்ன பயிரை நாட்ட முடியும்? 

                 கிளிநொச்சி நகரத்தில் சில கடைகள் இப்பொழுது மீளா  திறக்கப் பட்டிருக்கின்றன. அங்கு தமிழில் எழுதப்பட்ட கடைகளின் பெயர்களை வெள்ளை வண்ணம் பூசி படையினர் அழித்துள்ளனர். 

                 விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை படையினர் தம் சொந்த தேவைகளுக்கு எடுத்துள்ளனர். 

                  எப்பொழுது வன்னி நிலத்தில் இயல்பு வரும் என்று தெரியவில்லை. அங்கு எப்பொழுது மக்கள் முழுமையாக அனுமதிக்கப் படுவார்கள் என்று தெரியவில்லை. முழுக்கு முழுக்க படைகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருக்கிறது. அவர்களின் பாவனையில் இருக்கிறது. 

                தமிழர்களின் நிலைமை இப்படியிருக்க, சிங்களவர்கள் நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் வடக்கை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்களவர்களுக்கு வடக்கு பார்க்க துடிக்கும் சுற்றுலா தலமாக தென்படுகிறது.

                சிங்களவர்கள் இங்கு வந்து பார்ப்பவை எல்லாம் யுத்தத்தில் சிதைந்த நிலத்தையும் அதில் பாதிக்கப்பட்ட மனிதர்களையும் தான். முழுக்க முழுக்க முப்பது ஆண்டுகள் சிதைவுகளுடன் இருக்கும் ஈழத்தை அவர்கள் பார்க்கிறார்கள். அவைகளில் தங்கள் படை நிகழ்த்திய வீரதீரங்களைப் பார்க்கிறார்கள். அகதிகளாய் அலையும் மக்களை, அங்கங்களை இழந்து வலியுறும் மக்களை அவர்கள் பார்க்கிறார்கள். 

                 இப்படி சுற்றுலா வரும் சிங்கள மக்களை பெரும் குதுகலத்துடன் அவர்களின் படைகள் வரவேற்கின்றன. சிங்கள மக்கள்களும் பெரும்  மகிழ்ச்சியுடன் படைகளைச் சந்திக்கிறார்கள். 

                அவர்கள் ஒரு பௌத்த நகரத்திற்கு வருவது போல உணர்வார்கள். வன்னி நிலமெங்கும் புத்தர் சிலைகளை படையினர் நட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வழிபாடுகள் நாள் தோறும் நடைபெறுகின்றன. விடுதலைப்புலிகளிடமிருந்து வன்னி நிலத்தைக் கைப்பற்றியவுடனே இந்த புத்த சிலைகளை நடுவதில் படையினர் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். யாழ்ப்பாணம், நாகவிகாரை, நாயினா தீவு, விகாரை, மாதகல் விகாரை என்று பல இடங்கள் சிங்களவர்கள் வந்து வழிபடும் சுற்றுலா தளங்களாக மாறியிருக்கின்றன. 

                எமது மக்கள் இன்றும் வீடுகளுக்குத் திரும்பவில்லை. வீடுகளும் இல்லை. கடைகளும் இல்லை. சிதைந்த உருத் தெரியாமல் கிடக்கின்றது வாழ்வு. எப்படி எதை வைத்து தொடங்குவது என்று அடிப்படை இல்லாமல் இருக்கின்றது. யுத்தத்தில் மெலிந்த மக்கள் தடுப்பு முகாம்களில் வாடிய மக்கள், குழந்தைகள் போஷாக்க்ற உணவுகளை சாப்பிடுகின்றனர். இதற்கு மத்தியிலும் அவர்கள் முகத்தில் தவழும் புன்னகைதான் நம்பிக்கையின் அடையாளம். புழுதியும் வெட்கையும் நுளம்பும் இருட்டும் என்று வாழ்க்கை பயங்கரமானதாகத் தொடருகிறது."

தீபச்செல்வன் பற்றி!
இப்படி ஈழ மக்களின் இன்றைய துயர நிலையை, தொடரும் சோகத்தைச் சொல்லும் தீபச்செல்வன்,'ஆளற்ற நகரத்தைத் தின்ற மிருகம்', 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' ஆகிய கவிதைத் தொகொப்புகளின் மூலம் அறிமுகம் ஆனா இளம் கவிஞர். 'தீபம்', என்ற தன் வலைப்பதிவில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஈழம் குறித்து நிறைய எழுதி வருகிறார். அதோடு, யுத்த பூமியின் சாட்சியாக ஈழத்தில் இன்றும் வசித்து வருகிறார். 

என் கருத்தைக் கேளுங்கள்: 
இலங்கையில் இது ஒரு நிகழ்வு மட்டுமா? எத்தனையோ தமிழ் சகோதரர்கள்/சகோதரிகள் மற்றும் அவர் தம் குடும்பங்களின் மறு நிமிடங்கள் நிச்சயமற்றவையாகத்  தான் தொடர்கின்றன. அவர்தம் எதிர்காலம் ................???????????????. கேள்விக்குறிகளை கணக்கிடமுடியாது உள்ளது. தமிழர் இனம் உலகெங்கும் பரவி இருந்தும் உலகில் எத்திசையிலாவது தமிழன் பாதிக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றான். இதற்கெல்லாம்  விடிவு காலம் எப்போது? தமிழ் நாட்டிலும் அப்படியே! சென்னை பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க இந்தியாவின் ஒரு மாநிலமான ஆந்திரா பகுதிக்குச் சென்றால் அங்கு நம் மீனவர்களின் படகுகளைப் பிடித்துக்கொண்டு  அத்தனை பேரையும் அடித்து சித்திரவதைக்கு ஆளாக்குவதும், படகில் உள்ள மீன்களையும் எடுத்துக் கொண்டு, கரைக்கு நம்மவர்களை கொண்டு போய் கட்டி வைப்பதும், பிணையத் தொகையாக பல இலட்சங்களை கறப்பதும்  சமீப காலமாக நடந்துகொண்டுதான் இருந்தது.  தெற்கில் கச்சத் தீவு பக்கமாக மீன் பிடிக்கையில் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு பலியாவதும் தினசரி செய்திகளாக இருக்கிறது. 

தமிழா! நீ எப்போது தான் நிம்மதியாக வாழப்போகிறாய்? உலகில் மற்ற இனங்களெல்லாம் நிம்மதியாய் வாழுகையில் நீ மட்டும் கவலைகளிடம் கடன் வாங்கி கலைந்து போவது ஏனப்பா?