இன்றைய, பலமான அறிவியல் வளர்ச்சியை உலக நாடுகள் கண்டு, அனைவரும் பயன் பெறும் சூழ்நிலையில், நாம் எங்கிருக்கிறோம்? தமிழர்கள் என்று மட்டுமில்லாமல் அனைத்து இனத்தவருக்கும் தத்தமது பிள்ளைகளை நல்லவிதமாக, பேணிக்காத்து வளர்ப்பது ஒரு சவால் நிறைந்த வேலையாகும். பிள்ளைகள் பிறந்தது முதல் அவர்கள் பெரியவர்கள் ஆகும் காலம் வரை, பெற்றவர்கள் தங்கள் இரு கண்களை எப்படி பார்த்துக் கொள்வார்களோ, அப்படித்தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவேண்டியுள்ளது. தங்கள் பாரம்பரியம் சிறக்க நினைப்போர் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகவே நடந்து கொள்வர்.
இன்று தங்கள் உழைப்பின் பெரும் பகுதியை தங்கள் பிள்ளைகளுக்காக செலவழிப்போர், தமது மகனோ/மகளோ சமுதாயத்தில் ஒரு சிறந்த நிலையில் வாழ வேண்டும், தாம் பெற்ற பொருளாதார சிரமங்களையோ, கல்வி பெறுதல் குறித்த சிரமங்களையோ பெறக்கூடாது என்ற ஒரு நியாயமான குறிக்கோளுடன் வாழ்ந்து வருகின்றனர். இம்மாதிரி பெற்றோர்கள், தாங்கள் உழைக்கும் உழைப்பு, அதன் வழியான செல்வம் எப்படி தங்கள் பிள்ளைகளுக்குத்தான் என்று ஆணித்தரமாக நினைத்து வாழ்கிறார்களோ, அதே போல், தாங்களும் தங்கள் பிள்ளைகளுக்குச் சொந்தமே என்று நினைக்க மறக்கும் காலச் சூழ்நிலை இன்று நிலவுகிறது. உள்நாட்டில் வேலை பார்க்கும் பெற்றோர் நிறைய மணித்துளிகளை சொந்த வியாபாரம் அல்லது அலுவலகம் அல்லது பிற வேலைகளில் செலவு செய்யும் நிலையில், தங்களின் பிரிவை தமது பிள்ளைகள் புரிந்து கொள்வர் என்று நினைப்பார்களேயானால், எல்லா பிள்ளைகளும் புரிந்து கொள்வர் என்பது இயலாத காரியம். 'எனது தாயாருக்கு/எனது தந்தையாருக்கு அவரது சொந்த வேலைதான் முக்கியம். என்னைக் கண்டுகொள்ள அவருக்கு ஏது நேரம்', என்று கூறும் பிள்ளைகள் உண்டு. பெற்றவர்களாகிய நீங்கள் நினைக்கலாம், 'நாம் இத்தனை சிரமப்பட்டு சம்பாதிப்பது எல்லாம் யாருக்காக, என் பிள்ளைகளுக்குத்தானே?,'. ஆனால், பொருளாதாரமும் முக்கியம், பிள்ளைகளுடனான பாசமும் முக்கியம்.
நிறைய குடும்பங்களில் உதாரணங்களாக நாம் பார்க்கலாம். மிரட்டியே வளர்க்கப்பட்ட பிள்ளையோ, அல்லது சரியாக கவனித்து வளர்க்கப்படாத பிள்ளையோ தங்களின் சம்பாதிக்கும் காலத்தில் தங்கள் பெற்றோர்களை மதிக்காமல், அவர்களது தேவைகளை நிறைவேற்றாமல் உதாசீனம் செய்வதை பார்க்கலாம். அதே நேரம், அன்போடும், பரிவோடும் ஒரு நண்பரைப் போல் வளர்க்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் பெரியவர்கள் ஆனதும் தங்கள் பெற்றோரை எப்படி மதித்துப் போற்றுகிறார்கள் என்பதையும் நம் அண்டை வீடுகளில் காணலாம்.
எனவே, உங்கள் பிள்ளைகளுடனான நேரத்தை அதிகம் செலவழியுங்கள். அன்பு காட்டுங்கள். அளவோடு அன்பு காட்டுங்கள். உங்களின் முதுமை காலத்தில் நீங்கள் முதியோர் இல்லம் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
* பிள்ளைகள் வளர்ப்பு
*அம்மா நான் உதவட்டுமா?