Wednesday, July 21, 2010

அன்பிற்குரியவள்!

"அவள்
என் அன்பிற்குரியவள்!
இந்த அன்பிற்குரியவள்!
தனியே இவன் பிறந்தும்
என்னில் பாதி.

என் தோழியானவள்,
துன்ப நேரங்களில்
தோள்களானவள்.

நாங்கள் பிரிவெய்தக் கூடாது.
வயது மூத்து நரை கழலும் போதும்
நாங்கள் பிரிவெய்தக் கூடாது.

கவிதை கூட கலப்படம் எய்தும்.
என்னவள் இலக்கணம்
இப்படித்தான் என வரையருக்கப்பட்டவள்.

அவளை நான் காதலித்திருக்கவேண்டும்
நாட்கள் வீணே நகர்ந்து போய்விட்டன.
வாழ்ந்த இடம் கூட தொலைவாகிவிட்டது.
ஆம்,
அவளை நான் காதலித்திருக்க வேண்டும்
அப்படியெனில்,
என் முயற்சிகளில் வெற்றி சாதித்திருப்பேன்,
வாழ்வியலில் ஜெயித்திருப்பேன்
என் ஊன்றுகோலாக அவளை கைக்கொண்டு.

இருந்தாலும் என்ன?
காலம் தாமதம் எனினும்
எல்லாம் கடந்தவன் காட்டிக்கொடுத்தான்
அவளை எனக்கே கட்டிக் கொடுத்தான்
இதோ உன் மனைவி
இவள் தான், இவளே தான் என்று!

என் கலங்கரை விளக்கு
கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
என் பாதை எதுவென்று
புலப்படுகிறது.
என் பயணம் அவளோடுதான்
என் சுவாசக் காற்று (தொடரும்)

Thursday, June 10, 2010

சித்த மருத்துவம் - டிப்ஸ்

உடம்பில் வியர்வை நாற்றமா? 
நீங்கள் குளிக்கும் போது நீர் உள்ள பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, ஒரு சிட்டிகை அளவு உப்பையும் கலந்து குளித்தால் வியர்வை நாற்றம் காணாமல் போய்விடும்.

கண்களைச் சுற்றி கருவட்டமா? 
வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருந்தால், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். கண்களின் கீழ் படிந்துள்ள கருவட்டங்களும் சிறுகச் சிறுக மறைந்துபோகும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக வேண்டுமா? 
நீங்கள் உண்ணும் உணவில் ஒரு கோழி முட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

கண்கள் குளிர்ச்சி பெறவேண்டுமா?    
பசும் பாலை கொதிக்க வைத்து ரோஜா இதழ்களை அதில் போட்டு மூடிவிட வேண்டும். நன்கு அறிய பிறகு, பாலை வடிகட்டி, பஞ்சில் நனைத்து கண்களின் இமை மீது போடலாம். இவ்வாறு செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும். அதிக நேரம் கம்ப்யுட்டரில் பணி புரிபவர்கள் இதனால் பலன் பெறலாம்.

Saturday, June 5, 2010

திருடப்பட்ட இளம் பருவம்


                                       




நன்றி: ritemail.blogspot.com

மேற்காணும் காட்சிகள் நம் உள்ளத்தை உருக்குவதாக இருக்கிறது. நம் பிள்ளைகளுக்கு இம்மாதிரி சூழ்நிலை அமைந்துவிடக்கூடாது என்று, இக்காட்சிகளைப் பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில், தங்கள் வாழ்க்கை முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று எண்ணித்தான் இக்காட்சிகளை எனக்கு வந்த யாஹூ குரூப் இ-மெயிலில் இருந்து எடுத்து இங்கே கொடுத்துள்ளேன். பொதுவாக, பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்று எங்கேயும் படிக்க தேவையில்லை. ஒரு தாய், தகப்பன் என்கிற பட்சத்தில் இரத்தம் சார்ந்த இயற்கையான பாசத்தையும், அன்பையும் உங்கள் பொருளாதார வசதிக்கேற்றவாறு சரிவர காண்பித்தாலே போதும் என்பது என் கருத்து.

Friday, May 28, 2010

அச்சுறுத்தும் தீவிரவாதம்

Yahoo! FTP (Fit to Post)
             கடந்த 19 ம் தேதியன்று யாஹூ சிங்கப்பூரின் முதன்மை பக்கத்தில் "A Clear and Present Danger" என்ற தலைப்பில் ஈவான் போய் என்பவரால், ஆர்ச்சட் எம்ஆர்ட்டி, இந்தோனேஷியா நாட்டு தீவிரவாத குழு ஒன்றின் (ஜெமா இஸ்லாமியா) வெடிகுண்டு தகர்ப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தது, அந்நாட்டு காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளதை குறித்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதுபற்றிய கருத்து விவாதத்தில் நிறைய சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்தை, கவலையை, கோபத்தை வெளியிட்டிருந்தனர். சிலர், "பொதுமக்கள் விழிப்போடு இருக்கவேண்டும்", என்றும், சிலர்,"காவல்துறை அதிகாரிகள் கணினியின் முன்பாக அமர்ந்தும், மொபைல் போன்களோடு பொழுது போக்கியும், சக அதிகாரிகளுடன் கதைகள் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்", என்றும், சிலர், "அப்படி காவலர்கள் நடந்துகொள்வதாக இருந்தால் நாமெல்லாம் பாதுகாப்பாக எப்படியிருக்க முடியும்?", என்றும், சிலர், "காவல்துறை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம், தண்டத்தொகை வசூலிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்", என்றும், சிலர், "காவல்துறையை குறைசொல்வதை நிறுத்திவிட்டு பொதுமக்களும் நாட்டு நலன் கருதி, காவலர்களுடன் ஒத்துழைக்கவேண்டும், ஒரே கையால் ஓசை வராது, இரண்டு கைகளையும் சேர்த்து தட்டினால் தான் ஓசை வரும்", என்றும், சிலர்,"மனிதவள அமைச்சும், குடியேற்றத்துறையும் சகட்டு மேனிக்கு வெளிநாட்டவரை சிங்கப்பூருக்குள் அனுமதிக்கிறதே, யாரைப்பார்த்தாலும் புதியவர்களாக திரிகிறார்களே, பின் எப்படி சந்தேக நபர் எவர் என்று எப்படிச் சொல்வது?", என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர். அதில், எனது கருத்தையும் பதிவு செய்துள்ளேன். எனது கருத்தை பார்வையிட உங்களையும் அழைக்கிறேன்.




அப்படி நான் என்ன சொல்கிறேன்?


             2000-த்தில் உலகம் அழிகிறது என்று சொன்னார்கள். ஆனால், உலகம் அப்படி அழியவில்லை. ஆனாலும், உலகின் பல்வேறு மூலைகளில் இயற்கை சீற்றங்களாகிய எரிமலை வெடித்தல், மண்/மலை சரிவு, வெள்ளம், சூறாவளி மற்றும் நாடுகளுக்கிடையிலான போர்கள், நாட்டுக்குள்ளேயே நடக்கும் இன உரிமைப் போர்கள், தீவிரவாதம், கொடிய நோய்கள், பயண விபத்துகள் மற்றும் பல காரணங்களால் உலகம் அழிந்துகொண்டுதான் வருகிறது. காரணம் என்ன என்று மதவாதிகள், அரசியல் நோக்கர்கள், அறிவியல் வல்லுனர்கள் எனப் பலரும் ஆராய்ச்சி செய்து வெளியிட்டாலும், பேசினாலும் பின்பற்றக்கூடியவர்கள், செயல்படுத்தக் கூடியவர்கள் செய்ய வேண்டியதை, செயல்படுத்தவேண்டிய நேரத்தில் செய்யாத அலட்சியப் போக்குகள் தாம் பெரும்பான்மை அழிவுகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.

            பொதுவாக, இயற்கை எனப் போற்றப்படும் ஐம்பூதங்களும் இவ்வுலகை வாழ வைக்கவே இறை சக்தியால் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உலகில் பெரும் தவறுகள் நேரும்போதெல்லாம் இதே இயற்கை அழிவை உண்டாக்கியிருக்கின்றன. ஆன்மிகம் சார்ந்த சான்றோர்களுக்கு இது புரியும். ஆனாலும், மனித மனங்கள் இதை சரிவர உணர்வதில்லை. வல்லரசுகளும் சரி, சிற்றரசுகளும் சரி. ஒரு நாட்டின் செயல்பாடுகள் அனைத்து உலக மக்களையும் கருத்தில் கொண்டே இருத்தல் அவசியம். ஏனென்றால், இன்றோ உலக மயமாக்கல் நல்ல விளைவுகளையும் அதே நேரத்தில் எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்கிவிட்டது. ஆயுத பலம், பண பலம், நண்பர்கள் பலம் மிக்க நாடுகள், குறிப்பாக, ஆட்சி புரிவோர் தங்களின் அரசியல் சுயலாபம் கருதியோ, தான் சார்ந்திருக்கும் இனம் சார்ந்தோ, அல்லது தன் நாட்டை மட்டும் வாழ வைக்கவேண்டுமென்று கருதியோ, மற்ற அருகாமை நாடுகள் மீதான அதிகார திணிப்புகளில் ஈடுபடும் தவறான செயல்கள் ஒன்றுமறியா அப்பாவி பொதுமக்களின் உயிர்களை, உடைமைகளை பாழ்படுத்தும் ஆயுதங்களாய் மாறிவிடுகின்றன. உதாரணங்களாக, இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், அவ்வளவு ஏன், பாகிஸ்தான், அதைவிட கொடுமை, இந்தியா.

            இந்தியா, சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை எத்தனையோ அரசுகளை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், அப்படி வந்த அரசுகள் எல்லாம் ஆற்றிய பணிகள் என்று பார்த்தால், அவைகளுள் அதிகார வர்க்கத்தினரின் திணிப்புகள் தான் அதிகமாக இருக்கும். கவலை தரக் கூடிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் உள்நாட்டு தீவிரவாதமும், வெளிநாட்டு தீவிரவாதமும் கங்கணம் கட்டிக் கொண்டு நாட்டையே பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. சாதிகளின் போராட்டங்கள், மதங்களின் போராட்டங்கள், தீவிரவாத தாக்குதல்கள் 2020 ல் "இந்தியா வல்லரசு" என்ற இலக்கை எட்ட விடுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

            ஆனாலும், தீவிரவாதிகள் என்று வரும் போது, ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபடும் அவர்களுக்கெல்லாம் உண்மையில் நோக்கம் தான் என்ன? கொள்கைகள் தான் எவை? மொத்த உலகில் அவர்கள் சார்ந்த மதம் என்ற ஒன்று மட்டுமில்லாமல் எத்தனையோ மதங்கள், இனங்கள், மொழிகள் அதைச் சார்ந்த மனிதர்கள் எத்தனையோ கோடிகள் வாழ்கின்றனர். உண்மையில் எந்த மதமும் உயிர் பறிக்கும் வித்தையைச் சொல்லித்தரவில்லை. அல்லது, பிறக்கும் போதே எந்த இனத்தாரும் தீவிரவாதியாய் பிறப்பதுமில்லை. இவர்கள் மாற்றப்படுகிறார்கள். ஒருவன் பல நாட்களாக உணவே உட்கொள்ளவில்லை என்று வைத்துக்கொள்வோம். உயிர் போகும் கொடுமையை அனுபவிக்கிறான். அப்போது எவன் ஒருவன் உயிர் தரும் உணவைக் கொடுத்து பசி போக்குகிறானோ அவனே, பசித்தவனுக்கு கடவுள் ஆகிவிடுகிறான். அந்த கடவுள் சொல்வதெல்லாம் இவனுக்கு தெய்வ வாக்கு. அம்மாதிரி கடவுள் நிலையில் இருக்கும் தீயவர்களின் பிடியில் சிக்கும், ஏழை நாடுகளைச் சேர்ந்த அல்லது, பணக்கார நாடாகவே இருந்தும், ஏழைகளாகவே நீடித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மை இனம் சார்ந்த இளைஞர்கள் மனமாற்றம் மிக எளிதாக செய்யப்பட்டு கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு உலகை பேரழிவிற்கும் பேரவலத்திற்கும் உள்ளாக்குகின்றனர்.

            இவர்களின் நோக்கம் வேறு என்னவாக இருந்திட முடியும்? இந்த மதம், இந்த மதம் சார்ந்தவர்கள் தான் தீவிரவாதிகள் என்று குறிப்பாக சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது. ஏனெனில், அம்மதம் சார்ந்தோர் உண்மை நிலை என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பவில்லை என நம்புகிறேன். ஒரு பேரழிவை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தோர் உண்டாக்கிவிட்டனர் என்று அறிகிறபோது, அந்த மதம் சார்ந்த பெரியோர் எல்லாம், இனி வரும் காலங்களில் மேலும் அழிவுகள் நடக்கக் கூடாது என்கிற மனநிலையில் தங்கள் சமுதாயத்தில், நாட்டில் கட்டுப்பாடுகளை உருவாக்கிட வேண்டும். அப்படியில்லாமல், மற்ற மதத்தினர் ஒரு குறையைச் சொன்னால் உடனே அதை தேசிய அல்லது உலக அளவில் ஊதிப் பெரிதாக்கி பலரை பலிகடாக்கள் ஆக்கி விட்டுத்தான் விடுகின்றனர். எந்த பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. இந்த உலக மக்கள் இனியேனும் தங்களுக்குள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு, எஞ்சியிருக்கும் மற்றும் இனி வரும் காலங்களை ஆளப்போகும் இளையவர்களின் உயிர்களுக்கு உத்திரவாதம் தரல் வேண்டும். இல்லையெனில், தீவிரவாதம், மீண்டும் ஒரு உலகப்போரைக் கூட உண்டாக்கும்.


          சமீபத்தில், மே, 19 ந்தேதி, இந்தோனேஷியாவில் காவல்துறையால் தேடப்பட்டு, கைது செய்யப்பட தீவிரவாத கும்பல் சுமார் 11,000 மலேசிய வெள்ளிகளுடன், மலேசியா வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்து ஆர்ச்சட் விரைவு இரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்தது செய்தி நிறுவனங்கள் வழி தெரிய வந்துள்ளது. அவர்களின் நோக்கம், பிரிட்டிஷ், அமெரிக்கா, மற்றும் அதன் நட்பு நாடுகள் சார்ந்த மக்கள் தங்கியிருக்கும், நடமாடும் முக்கிய பகுதிகளில் அழிவை உண்டாக்குவது தானாம். ஆனால், இவர்களின் நோக்கத்திற்கும், சிங்கப்பூருக்கும் தொடர்பேயில்லை. எத்தனையோ இந்தோனேஷியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். குறிப்பாக, பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பார்க்கின்றனர். உண்மையில், இம்மாதிரி தீவிரவாதிகள் தங்கள் நாடு, தங்கள் மக்கள், அவர்களின் எதிர்காலம் என்ற உணர்வு கொண்டிருப்பவர்களாக இருப்பின் நாச வேலைத் திட்டங்களுக்கு ஏது வேலை. தீவிரவாதிகள் திட்டமிட்டபடி ஏதேனும், நடந்திருந்தால், அதனால், பாதிக்கபட்டிருக்கும் மக்களின் முழு கோபம் யார் பக்கம் திரும்பும், அதனால், எதிர்காலத்தில் நேரும் பிரச்னைகள் தான் என்ன? என்று இத்தீவிரவாதிகள் யோசிப்பார்களா? எனவே, மத ரீதியில் செயல்படும் இம்மாதிரி தீவிரவாதிகள் நசுக்கப்பட வேண்டும். கொடுமையான தண்டனைகள் இவர்களுக்கு தரப்பட வேண்டும். புதிதாய் எவரும் தீவிரவாதிகளாய் ஆவதற்கே நினைக்கக் கூடாது. இவர்களை ஆதரிப்போர் யாராகிலும், தடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், மனித உயிர்கள் நிம்மதியாய் வாழும் காலம் நிச்சயிக்கப்படும்.

Tuesday, May 18, 2010

புதிய சிங்கப்பூர் பேருந்து கட்டணங்கள்

3 ஜூலை 2010 முதல் தூர அடிப்படையிலான கட்டணங்கள்

           3 ஜூலை 2010 முதல் பேருந்து, இலகு மற்றும் பெருவிரைவு இரயில் ஆகியவற்றில் பயணம் செய்த மொத்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

          தூரத்தின் அடிப்படையிலான கட்டணங்களுடன் உங்களின் பயணத்தின் ஒவ்வொரு பயண மாற்றத்திற்கும் ஏறுவதற்கான கட்டணம் விதிக்காமல் பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும்.

          பேருந்தில்/இலகு மற்றும் விரைவு இரயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் மறக்காமல் அட்டையைத் தட்டுங்கள்.

          அவ்வாறு அட்டையை கட்டண கருவியின் மீது வைக்க மறந்தாலும், அல்லது சரிவர வைக்காவிட்டாலும் அதிகபட்ச கட்டணம் விதிக்கப்படும்.


          * தூரத்தின் அடிப்படையிலான கட்டண முறையைப் பற்றி மேல்விபரம் அறிய: 


1800-225 5582



                                                     SBS TRANSIT   
                                                     1800-287 2727   
                                                http://www.sbstransit.com.sg/



                                 SMRT
                           1800-336 8900
                        www.smrt.com.sg




சாப்பிடுங்கள் வாழைப்பழம்! சாய்த்திடுங்கள் மனச்சோர்வை!

           


              தமிழகத்தைப் பொருத்தமட்டில் அனைத்து பழங்களிலும் முக்கனிகள் என்று சிலவற்றை சொல்வர். அவை: மா, பலா, வாழை. மாதாவால் ஊட்ட முடியாத உணவை மாங்காய் ஊட்டும் என்பதாக சொல்லும் வழக்கம். தமிழகத்தில் சமையலில் மாங்காய் ஒரு முக்கிய உணவுப்பொருளாக உள்ளது. வாழை என்று எடுத்துக்கொண்டால், வாழைக் காய் என்பதைவிட வாழைப்பழமே முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் வாழை பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் என்பதைப் பார்ப்போம். 

           வாழைப்பழம், உடல்நலம் என்கிற பட்சத்தில் மிகச் சிறந்த உணவாகும். உடலில் சக்தியை அதிகரிக்கும் கார்போ ஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளன. இயற்கையான நார்ச்சத்தும் பல வகையான உடலியல் பலன்களைத் தருகின்றன. 

             தோலின் வளர்ச்சிக்கும், கண்களின் திசுக்கள் வளர்ச்சிக்கும் உதவுகின்ற வைட்டமின் A வாழைப் பழத்தில் நிரம்பவே உள்ளது. மேலும், நரம்பு மண்டலத்தை அமைதியுறச் செய்யும்   வைட்டமின் B -யும் கூட வாழைப்பழத்தில் உள்ளது. 

                  மனித உடலில் நீர்ம அளவை பாதுகாக்கும், செல்களை பாதுகாக்கும்,  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய இயற்கையான பொட்டாசியம் வாழைப்பழத்தில் உள்ளது. 

                 வாழைப்பழத்தில்  உள்ள புரதம் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாவை வெளியேற்றி வயிற்றில் உண்டாகும் அமிலத் தன்மையை குறைக்கிறது. 

                   வாழைப்பழத்தில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. இது, நம் உடம்பில் உள்ள இரத்த அணுக்களின் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. அனீமியா எனும் இரத்த சோகை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகும். 

                    வாழைப்பழத்தில் உள்ள அமினோ அமிலங்கள் (டிரிப்டோபான்), நமது உடலின் இயற்கையான வேதி மாற்றங்களின் மூலம் செரோடோனின்  எனும் பொருளாக மாற்றப்பட்டு அதன் மூலம், உடலுக்கு ஓய்வைத் தருகின்றன. 


    

Friday, May 14, 2010

மனிதனின் சிறப்பு

         


                 சமீபத்தில் பொத்தோங் பசிரில் உள்ள எளியமுறை குண்டலினி யோகா மையத்தின் வலைகுழுமத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அது முதல், மையம் சார்ந்தோர்களால் மாதாமாதம் வெளியிடப்படும் இணைய இதழ் இ-மெயில் வாயிலாக பெறும் வாய்ப்பைப் பெற்றேன். "வாழ்க வளமுடன்" என அருளும் திருமிகு. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சார்ந்த யோகா குறித்த செய்திகள், தகவல்கள் "அருள்மலர்" என அழைக்கப்பெறும் இணைய இதழிலில் வெளியிடப்பெறுகின்றன. அவ்வாறு வெளியிடப்பெறும் இதழின் மே மாதப் பதிப்பு மிக அருமையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பெற்ற "மனிதனின் சிறப்பு", எனும் தலைப்பிலான கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன். உங்களுக்கும், தொடர்ந்து அருள்மலரைப் பெறும்  விருப்பம் இருப்பின் யோகா மையத்தின் வலைக் குழுமத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அதன் இணைப்பை கீழே தருகிறேன். 

மனிதனின்   சிறப்பு 
            உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த மேலான ஒரு இயக்க நிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறை நிலையை முழுமையாக எடுத்துக்காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே. 
               உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள் அருட்பேராற்றலின் இயற்கை (மெய்ப்பொருள்) இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலை கொண்டு மனித உரு சிறப்பாக, வியத்தகு முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உடல் குறிப்பிட்ட அளவு பருமனால் எல்லையுடையது. உயிரானது நுண்ணியக்க மூலக் கூறான விண் எனும் நுண் துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்த ஒரு தொகுப்பாக இயங்கும் ஆற்றல். இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குப் புறத்தே தக்க அளவு விரியவும் கூடியது. 
                 அறிவு என்பது உயிரை மையமாகக் கொண்ட மெய்ப்பொருள். உடல் மூலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம், சிந்தனை, கற்பனை இவற்றிற்கேற்ப விரிந்தும், சுருங்கியும் செயல்புரியும் ஆற்றலுடையது. அறிவில் அடங்கியுள்ள இரகசியங்கள் எண்ணியறிய முடியாதவை. எல்லாம் வல்ல முழுமுதற்பொருளான மெய்ப்பொருள் உயிராற்றலை மையமாகக் கொண்டு தனது அசைவினாலும், உணர்வாலும் ஆற்றிய வினைப்பதிவுகள் அனைத்தும் அடக்கம் பெற்ற கருவூலம் அறிவு ஆகும். இது உயிர்த்துகளின் மையத்தில் தொடங்கி உயிர்த்துகள் தற்சுழற்சியால் விளையும் ஜீவகாந்த சக்தி மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் மேலும் உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் யூகத்தால் பேரியக்க மண்டலம், அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்ப்பொருள் வரையிலும் விரிந்து சுருங்கும் இயல்புடையது. 
                    எல்லாம் வல்ல மெய்ப்பொருளே சுத்த வெளியாகவும், மெய்ப்பொருளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்ச பூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் இயக்க ஒழுங்காகவும், உயிர்களிடத்தில் புலனுணர்வாகவும், மனிதனிடத்தில் எல்லாமுமாகவும் இருக்கும், தன் முழுமையை உணரும் பேரறிவாகவும் இருக்கிறது. இந்த நான்கு தத்துவங்களும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலிலும் சிறந்ததோர் உருவம் மனிதன்.

* உங்களையும் வலைக்குழுமத்தில் இணைத்துக் கொள்ள நீங்கள் யாகூவின் இணைய இ-மெயில் முகவரி வைத்திருந்தால் அல்லது புதிதாய் ஆரம்பித்துக்கொண்டாலும் சரிதான். 
          

Monday, May 10, 2010

ஆதவன்-சூர்யா-வாராயோ வாராயோ





யுவன் ஷங்கர் ராஜா - பையா

யுவன் ஷங்கர் ராஜா-கோவா

                 இசைஞானி இளையராஜா அவர்களின் இளைய புதல்வர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மிகச் சமீபத்தில் வெளிவந்த 'கோவா', படத்தின் ஒரு பாடல் 'இதுவரை', எனும் பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. அதே நேரம், பேஸ்புக்கில் இந்த பாடலை பின்னணி இசையாகவும், பாடல்வரிகளை திரையில் கொடுத்தும் வெவ்வேறு காட்சிகளை இணைத்து ரசிக்கும் வகையில் தந்துள்ளனர். பேஸ்புக்கில் தரப்பட்ட இணைப்பு யூ டியூபில் இருந்து செயல்படுகிறது. பாருங்கள், கேளுங்கள், ரசியுங்கள்.
 
 
 

Sunday, May 9, 2010

பிரம்ம ஞானம்

               சிங்கப்பூர், பொத்தோங் பசிர் MRT அருகில் உட்ஸ்வில்லி குளோஸ் 55A எனும் முகவரியில் சிங்கை தமிழ் சங்கம் அமைந்துள்ளது. அதில், Simplified Kundalini Yoga சென்டர்-ம் செயல்படுகிறது. யோகா பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர் கலந்துகொள்ளலாம். அவர்களின் யாஹூ குரூப்பில் நானும் இணைந்துள்ளதால், எனக்கும் இ-மெயில் அனுப்பியிருந்தனர்.  அந்த விளம்பரம் கீழே கொடுத்துள்ளேன். உடலை, மனதை ஒழுங்குபடுத்தும்  சிறந்த கலையான யோகப் பயிற்சியில் இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் விளம்பர முகவரியில் அணுகவும். 

அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

           இன்று மே, 09 சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உட்பட பெரும்பான்மை நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.  "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!" என்றார்கள். அதிலும், அன்னையராய் இருப்பதற்கோ ஆயிரம் மாதவம் செய்திருக்க வேண்டும். இந்த உலகை வாழ்விக்கும் தெய்வப் பிறவிகள். இறைவன் தந்த அருட்கொடைகள். இறைவன் இருக்கிறானா, இருக்கிறானா என்று ஓலமிடும் மனிதப்பிறவிகளுக்கு இதோ! நான் இந்த உருவில் இருக்கிறேன், உன் தாய் வடிவில் இருக்கிறேன், உன் தாயாக இருக்கிறேன் என்றுதான் இறைவன் சொல்லுவான். தாயுண்டு எனில் எல்லாம் உண்டு, தாய் இல்லையெனில் எவனும் இல்லை. அந்த வகையில், எந்த நாட்களை வேண்டுமானாலும் கொண்டாடாமல் இருக்கலாம். அன்னையர் தினம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டும், அன்னையராய் உருவெடுக்கும் அன்புத் தெய்வங்கள் போற்றப்பட வேண்டும். 

             இன்று பேஸ்புக்கின் நண்பர்கள் பகுதியில் நண்பர் ஒருவர் சில படங்களை வெளியிட்டிருந்தார். நானும், என் பங்கிற்கு, அப்படங்களை இங்கு வெளியிட்டு மகிழ்கிறேன். 




Saturday, May 8, 2010

வாழ்வில் எது முக்கியம்?


   
                      சமீபத்தில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் "பிரச்னைகளுக்கு முடிவு காண்பது எப்படி?", எனும் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சட்டென்று எனக்குப் பிடித்த ஒரு தலைப்பு, அதன் தொடர்ச்சியை தருகிறேன். படித்துப் பயன் பெறுங்கள்.
                      மனித வாழ்வில் முக முக்கியமான விஷயம் ஒன்றை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
                      'நம்மில் பல திறமைகள் இருக்கின்றன. உடலுழைப்பிலிருந்து கலை வரை; சுவைப்பதிளிருந்து அரிவாள் உணர்வது வரை. மனிதன் ஒரு கலைக்களஞ்சியம்; வற்றாத நீரூற்று!'
                        பலர் தங்களிடம் உள்ள திறமைகளைத் தட்டி எழுப்பாமலே - வாழ்க்கை வீணையை மீட்டாமலே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். இதைவிட பரிதாபத்துக்குரிய விஷயம், பலர் தங்களிடம் பல திறமைகள் உண்டு என்று அறியாமலே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
                        ஆபிரஹாம் மாஸ்லோ என்ற ஒரு மகத்தான மனோதத்துவப் பேராசிரியர் - ஆராய்ச்சியாளர், மனிதன் தன் முழுத் திறமையையும் வெளிக் கொண்டு வருவதுதான் வாழ்க்கை' என்று கூறினார். அந்தக் கொள்கையை நிரூபிக்க பல பெரிய மனிதர்களது, தலைவர்களது வாழ்க்கையையும் ஆராய்ந்தார். அதன் மூலம் Self-Actualization என்ற  ஒரு தத்துவத்தை உலகுக்கு அளித்தார். 'மனிதன் தன் முழுத் திறமையையும் செயல் வடிவம் கொடுத்து முழு மனிதனாவது' என்பதுதான் அவர் தத்துவம்.
                               'வயலின் வாசிக்க எனக்கு வராது' என்று சொல்வதற்குப் பதில்,'இதுவரை வயலினே வாசித்ததில்லை' என்று சொல்லிப்பாருங்கள். ஒரு மனோபாவ மாறுதலை உணர்வீர்கள்! இந்த மனோபாவ மாறுதல் உங்களுக்கு ஒரு வளர்ச்சியைக் கொடுக்கும். எதைப் பற்றி எல்லாம் ஆசைப்படுகிறீர்களோ அதை எல்லாம் முயற்சி செய்யுங்கள்.
                        தத்துவஞானி  எமர்சன் கூறுகிறார்: " ஆசையின் வித்து மனத்தில் முளைக்கும்போது அந்த ஆசையை அடைவதற்கான பூரணத் திறமையும் வாய்ப்பும் அந்த ஜீவனிடம் இருக்கிறது என்று பொருள். அந்தத் திறன், அந்த ஜீவனிடம் இருப்பதால்தான் அந்த ஆசையே முளைக்கிறது" என்று.
                       வாழ்வில் எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! பூவைப் பார்த்து ரசியுங்கள்! தென்றலைத் தடவிக் கொடுங்கள்! புளியிடமும் சிங்கத்திடமும் பொல்லாத மனிதர்களிடையேயும் உள்ள நல்லவற்றை - அழகைக் கவனியுங்கள்!
                            மாத்யூ ஆர்னால்ட்     என்ற ஆங்கிலேய எழுத்தாளர் 'சுவையும் ஒளியும்' (Sweetness & Light)   என்று மிக அற்புதமான ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதாவது வாழ்வு பூராவுமே தித்திப்பும், ஒளியுமாக அமைய வேண்டும். அமைத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம் - அவரது வாழ்க்கையின் தாத்பரியம். ஓரிடத்தில் அவர், "மனித இனந்த்தின் பல்வேறு துறைகளையும் வளர்த்து, வாழ்க்கையில் இன்பங் காண வேண்டும். அந்த ஒருமித்த வளர்ச்சி, ஒன்றோடொன்று இசைந்து, ஓர் இசைக்கச்சேரி போல இருக்க வேண்டும்" என்கிறார்.
                             இந்த அறிவை நாம் எப்படிப் பயன்படுத்தலாம். நான் எழுத்தாளனாகப் போகிறேன் என்று குமாஸ்தா வேலையை விட்டவர்களை எனக்குத் தெரியும். நான் தொழில் செய்யப்போகிறேன் என்று ஆசிரியர் வேலையை உதறியவர்களை நான் அறிவேன். விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் புதிய கண்டுபிடிப்பைச் செய்து பணம் குவிக்கப்போகிறேன் என்று மாதச் சம்பளம் தரும் வேலையை விட்டவர்களை நான் அறிவேன்.
                               மாறாக, அருமையாக நிர்வாகத் திறன் கொண்ட என் நண்பர், கல்லூரி ஆசிரியராக நாளை ஒட்டிக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன். நாம் விரும்பியதை அடைய நமக்குத் துணிச்சல் வேண்டும்; நம் மீது நம்பிக்கை வேண்டும்; கஷ்டங்கள் வரும்போது கலங்காத மனம் வேண்டும்.
                            அப்படி முடிவெடுக்கும்போது தான் நாம் விரும்பியதை அடைய முடியும்.
                            உங்கள் கனவு எது வேண்டுமானாலும் இருக்கலாம். புதிய பாதையில் நடக்க அஞ்சாதீர்கள்...! புதிய கதவுகளைத் திறக்க மலைக்காதீர்கள்! புதிய ராகம் என்று ஒன்றுமே இல்லை என்று கூறுவோருக்குச் செவி மடுக்காதீர்கள்!
                            உங்கள் வாழ்வில் புதிய கீதம் பாட முயலுங்கள்.
                             கடன் உங்களது பளுவாக இருக்கலாம். கடனிலிருந்து மீள்வேன். அதற்கு இன்ன இன்ன திட்டம் வகுப்பேன்! - என்று வகுங்கள்.
                             குடும்ப வாழ்க்கை இனிமையுற்று இருக்கலாம். 'என் மனைவியைப் (கணவனைப்) புரிந்து கொள்வேன். புதிய அற்புதமான வாழ்க்கை வாழ்வேன்!' என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
                             திருமணம் உங்கள் கவலையாயிருக்கலாம். 'நல்ல அறிவாற்றலும், திறமையுய்ம், அழகுங் கொண்ட ஒரு ஆள் எங்கோ பிறந்திருக்கிறார்' என்று நம்புங்கள்.
                             அத்தோடு செயல்படுங்கள். திட்டமிடுங்கள். லட்சியத்தை எப்படி அடையலாம் என்று பல்வேறு கோணங்களிலிருந்தும் ஆராயுங்கள்.
                              "உங்களுக்குப் பிடித்த இடத்தில், பிடித்த வேளையில் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள்" என்கிறார்கள் மனசிகிச்சை நிபுணர்கள். அப்படி அடிக்கடி சிந்தித்து - கற்பனை செய்து பழகுங்கள். நம்பிக்கையுடன் நடக்கப் போவதாக எண்ணிச் சிந்தியுங்கள். லவலேசமும் சந்தேகத்தை அங்கெ புகவிடாதீர்கள்! அந்தக் கற்பனை, அந்த ஆசை இருக்கிறதே அதுதான் ஜீவ தாகம், உயிர்த் துடிப்பு. அந்தத் துடிப்பு இப்பிரபஞ்ச சக்தியில் கலந்து உங்களுக்காக இயங்கத் தொடங்குகிறது.
                               ஆனால் நீங்கள் கற்பனையுடன் நின்றுவிடாமல் அதை அடைய என்ன வழிகள் உள்ளன என்று பாருங்கள். பல வழிகளிலும், 'எது முக்கியம்? எது முக்கியமானதல்ல' என்பதை ஆராயுங்கள். நீங்கள் விரும்பும் முக்கியமான விஷயத்தைப் பின்பற்றுங்கள். ஆங்கிலத்தில் இதை ஒரு சின்னச் சொல்லினால் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள், Priorities என்று. எது முக்கியம், எது முதலில் செய்யப்பட வேண்டும் என்பது வாழ்வில் மிகமிகக் கவனமாகச் செய்யப்பட வேண்டிய விஷயம்.
                                குதிரைக்கு முன் வண்டியை நிறுத்தி நாம் குதிரையைக் கொண்டு வண்டியைத் தள்ளச் செய்வதில்லை. வண்டிக்கு முன் குதிரை நின்று இழுத்தால்தான் வேலை எளிதாகும்.
                            பொதுவாழ்விலும் தனிமனித வாழ்விலும் இதற்கான சில உதாரணங்களைப் பார்ப்போம்.
                               கிராமத் தன்னிறைவு என்று பலகோடி ரூபாய்க்கான திட்டம் ஒன்று தீட்டி இருக்கிறார்கள் - சாலை, மருத்துவமனை, குடிநீர் என்று. அற்புதமான திட்டம். ஆனால் உடனடியாக அந்தப் பலகோடி ரூபாய்களை மூலதனமாக வைத்து, கிராமத்திற்கு கிராமம் தொழில் பேட்டைகளை நிறுவினால் பணம் புரளும்; வருமானம் வரும்; வேலைவாய்ப்புக் கிடைக்கும். போட்ட மூலதனம் பெருகும். அதிலிருந்து குடிநீர், சாலை எல்லாம் அமைக்கலாம். நிரந்தரமான செல்வம் பெருகும். ஏழைக்கு கிராமத்தில் வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டால் அவன் வயிற்றுக்கு என்ன செய்வான்? ஒரு மனிதனிடம் ஒருநாள் உணவுக்கான மீனைக் கொடுப்பதா? அல்லது வாழ்நாள் பூராவும் பயன்தரும் மீன்பிடிப்புத் தொழிலைக் கற்றுத் தருவது நல்லதா? பாருங்கள், எப்படிக் குதிரைக்கு முன் வணியைக் கொண்டு நிறுத்தி இருக்கிறோம் என்று!
                       தனிமனித வாழ்வுக்கு வாருங்கள்.
                       ஒரு பெண் அழகுடனும் பணத்துடனும் மருமகளாக வரவேண்டுமென்று எண்ணிப் பெண் பார்க்கிறார்கள் அல்லது மாப்பிள்ளை பார்க்கிறார்கள். வாழ்க்கையை வாழ குணங்கள் தேவை; நல்ல குணங்கள்  தேவை.
                  பணத்துடனும் அழகுடனும், வீட்டில் அடங்காப் பிடாரியை வைத்துக்கொள்ள முடியுமா? அல்லது ஒரு தறுதலைக்கு மாலை சூட்ட முடியுமா? முடிவெடுக்கும் போது எது முக்கியம் என்று கருதாமல் வாழ்க்கை பூராவுமே மனிதர்கள் அல்லல் படுகிறார்கள். வாழ்க்கை சுமையாகிறது. அவல வாழ்க்கை நடத்துகிறார்கள்.
                     அடுத்தமுறை பிரச்னை வரும்போது 'எது முக்கியம்' என்று கொஞ்சம் ஆராயுங்கள்.

என் கருத்து : வாழ்வில் எது முக்கியம்? எவற்றுக்கெல்லாம் நாம் முதன்மை தரவேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். எல்லாரது வாழ்க்கையிலும், எப்படிப்பட்டவராகிலும் சரி, செய்ய வேண்டிய செயல்களுக்கு கொடுக்கப்படுகின்ற முன்னுரிமையைப்பொறுத்தே வெற்றி பெறுகிறார்கள்.  திட்டமிடாத  வாழ்க்கை திறம்பட அமையாது. பத்து கி.மீ பயணம் என்றாலும் திட்டமிடுகிறோம். எங்கு செல்கிறோம், எதற்காகச் செல்கிறோம், எத்தனை மணிக்குள் செல்வோம், எப்போது வீடு திரும்புவோம் என்றெல்லாம். அப்படியிருக்க வாழ்க்கை என்று வரும்போது திட்டமிடலும், அதற்கான முதன்மை தரலும் மிக அவசியம். திரு.உதயமூர்த்தி அவர்களின் வாசகங்களுள் மிக முக்கியமானவற்றை கோடிட நினைத்தேன். ஆனால், அனைத்துமே மிக மிக முக்கியமான வாசகங்களே. திரு.உதயமூர்த்தி அவர்களின் மற்ற புத்தகங்களையும் வாங்கி படித்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

Thursday, May 6, 2010

ஓம் ஸ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் - வரலாறு

பிணி அகற்றும் மாமருந்தாய் திருவாரூர் மடப்புரம் தனில் ஜீவ சமாதியராய் வீற்றிருந்து மனமுருகி வேண்டும் அடியவர்க்கு அருளிச் செய்யும் என் ஐயனின் தல வரலாற்றுப் புத்தகத்தின் பிரதிகளை நீங்கள் பெறும் வகையில் இணைய இணைப்பை  இங்கு வெளியிடுகிறேன். மெய்யன்பர்கள் படித்து ஐயாவின் அருட்சிறப்பை உணர்வீர்களாக!


தல வரலாற்று பதிவிறக்கம்

குரு போற்றி 
 
*குறிப்பு: தலவரலாற்றை உங்கள் கணினிக்கு பதிவிறக்கம் செய்திட நீங்கள் www.scribd.com எனும் இணைய தளத்தில் பதிவு செய்துகொண்டு தல வரலாற்றைப் பெறலாம்.

திருவாரூர் சென்று வருவோம் 2

குரு தக்ஷிணாமூர்த்தி ஐயா அவர்களின் திரு உருவப்படம் 
 
ஐயா அவர்கள் தம் சிறு வயது முதலே துறவு பூண்டவர்கள் ஆவர். உலகத்தின் சராசரி விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள். ஐயா நிகழ்த்திய அதிசயங்கள் எண்ணற்றவை. ஐயாவின் வரலாற்றை பின்வரும் பகுதிகளில் இணைக்கின்றேன். 

ஐயாவின் இந்த திருஉருவப் படமே சன்னதியில் விற்பனையாகிறது. ஐயாவை வணங்க நினைப்பவர்கள் இப்படத்தை உங்கள் கணினியில் சேமித்து, பிரிண்ட் செய்து நலம் பெறுங்கள்.

திருவாரூர் சென்று வருவோம் 1

(தொடர்ச்சி ......)

மூலவர்: 

உற்சவர்: 
சன்னதியின் இடப்புறமாக, அதாவது வடக்கு திசையில் தென்முகம் நோக்கி உற்சவராய் ஐயா வீற்றிருக்கிறார். அதே புறமாக ஐயாவுக்கும் அடுத்தபடியாக மடாதிபதிகளாய் விளங்கியவர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. 
ஜீவசமாதியின் வெளித்தோற்றம்: 



Tuesday, May 4, 2010

ஏறு மயிலேறி !

முருகன் குறித்த பாடல்:
 
" ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்று 
ஈசருடன் ஞான மொழி பேசு முகம் ஒன்று 
கூறு மடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று 
குன்றுருவ வேல்வாங்கி நின்ற  முகம் ஒன்று 
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று 
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று 
ஆறுமுகமான பொருள் முருகா நீயருளல்  வேண்டும் 
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமானே! "


Thursday, April 29, 2010

திருவாரூர் சென்று வருவோம்

                                              (ஸ்ரீ குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்)

                உலகில் மனிதர்களின் தீர்க்க இயலா வியாதிகளைத் தீர்க்கும் ஆலயங்கள் இந்தியாவில் நிறைய உண்டு. நமக்கு அவ்விடங்கள் அனைத்தும் தெரிய வாய்ப்புகள் குறைவே. தெய்வங்களிடம் பலவாறு வேண்டிடினும் இன்னும் தீரவில்லையே என்று வேதனைப்படுவோரும் உண்டு. அவ்வாறு தீர்க்க இயலா வியாதிகளையும் தீர்த்து, நியாயமான வேண்டுதல்களையும் நிறைவேற்றிக்கொள்ள நாம் நாட வேண்டிய இடம்,  ஏசு கிறிஸ்து, நபிகள் நாயகம், புத்தர், மகாவீரர், மற்றும் பலர் தங்கள் வாழ்வை இவ்வுலகிற்கே அர்ப்பணித்து இவ்வுலகம் மேன்மையுற பாடுபட்டு இவ்வுலகம் முழுமைக்கும் பெரும் துணையாய் நிற்கும் மகான்கள் வரிசையில் தமிழகத்திலும் கடந்த காலங்களில் ஆங்காங்கே அவதரித்து மனிதப் பிறவிகளின் துயர் நீக்கி தங்கள் வாழ்வை, வசதிகளைத் துறந்து, உலகியல் சுகங்களைத் துறந்து கடைசி வரை இறைவனின்  உத்தரவை சிரமேற்கொண்டு வாழ்ந்து ஜீவன் முக்தர்களாக இன்றளவும் வாழ்ந்து சாமான்யரின் புறக்கண்களுக்கு  அகப்படாத சித்தர்களாய் உலவிவருகின்றனர்.

                    அந்த வரிசையில், திருவாரூரில் மடப்புரம் எனும் பகுதியில் ஜீவன் முக்தி அடைந்து தம்மை நாடி வரும் பக்தர்களின்  நியாயமான வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றும்  நல்துணையாய் விளங்குதல் திருவாரூர் மற்றும் திருவாரூர் சார்ந்த பகுதிகளில் வாழும்  மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

             பொதுவாக, ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் சரிவர இல்லையெனில் அவரவர்களுக்கு வியாதி ஒரு பிரச்னையாக வரும். என்னதான் மருத்துவம் பார்த்தாலும் அவ்வளவு எளிதில் குணம் பெற முடியாது. எத்தை தின்றால் பித்தம் குணம் பெறும் என்றிருக்கிறது. அதற்குத்தான், பெரியோர், வாழும் காலத்தில் நல்லதைச் செய்யுங்கள், நன்றாய் வாழுங்கள், எவரையும் உடலால் மனதால் புண்படுத்தாதீர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள், மற்றவரை துன்புறுத்தாதீர்கள், அளவோடு பொய் பேசுங்கள், அளவோடு பொருள் சேருங்கள், மாற்றான் மனை நோக்காதீர்கள் என்றெல்லாம் நம் மூதாதையர் காலம்தொட்டு சொல்லிவந்தாலும் அதைக் கேட்டு வந்தோரின் சந்ததிகள் எல்லாம் என்னதான் வாழ்வில் சிரமங்கள் நேர்ந்தாலும் இறைவனின் துணைகொண்டு அச்சங்கடங்களை எல்லாம் தாண்டி நலமுடன் வாழ்தலும், தான்தோன்றித் தனமாய் எதற்கும் வளைந்து தராமல் தவறான செயல்களில் ஈடுபட்டோரின் சந்ததிகள் இன்றளவும் என்னதான் வாழ்வியல் வசதிகள் கொண்டிருந்தும் தீராத நோய்களால் துன்புற்றும், குழப்பமான பிரச்னைகளில் சிக்கித் துன்புற்றும், கவலைகளை கடன்வாங்கி அவதியுறுவதும் இக்காலம் முதல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

                      நான் ஒன்றை பலமாகச் சொல்வேன். நமது பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த பொன், பொருள், நிலம், பணம் என அனுபவிக்கும் உரிமை கொண்டிருக்கிறோமோ, அதே போல அவர்கள் சேர்த்து வைத்த பாவ, புண்ணிய செயல்களுக்கும் நாமும் அனுபவித்தே ஆகவேண்டிய நிலையில் உள்ளோம். இந்த சொத்து என் முயற்சியில் சேர்த்தது அல்ல, எனவே இது எனக்கு வேண்டாம் என்று எவரேனும் சொல்வாரோ? அதே போல் தான் அனைத்தும். அந்தவகையில், இம்மாதிரி பாவச் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டிய சூழலில் தெய்வங்கள் கூட நம்மிடமிருந்து சற்று எட்டியே நிற்கும். ஆனாலும், நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? என்று கேட்டு நீங்கள் உண்மையிலேயே வருந்துவதாக இருப்பின் உங்களின் வேண்டுதலை இறைவனிடம் கொண்டு சேர்ப்பவர் தாம் சித்தர்களாய், ஜீவன் முக்தர்களாய் விளங்கும் இப்பெருமான்கள் ஆவர்.

                 பொதுவாக, ஜீவா சமாதிகளின் முன்பு உண்மை வேண்டுதலுடன் கண்ணீர் விட்டு, மனம் முழுமைக்கும் இறையருள் வேண்டி வணங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஆன்மீகவாதிகளுக்கு நன்கு தெரிந்த ஒன்று. அந்த வகையில் திருவாரூர், மடப்புரத்தில் ஜீவன் முக்தராய் விளங்கும் ஸ்ரீ குரு தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் சன்னிதானம் சென்று அய்யாவை வணங்கி வாருங்கள். தீராத வியாதிகள் எவையும் தீரும் என்பது திண்ணம்.

                       இத்துணை சிறப்பு கொண்ட அய்யாவின் ஜீவசமாதி, திருவாரூர் நகரில், ஸ்ரீ தியாகராஜர் ஆலயத்தின் தெப்பக்குளத்தின் மேற்குப் பக்கமாக உள்ள மடப்புரத்தில் அமைந்துள்ளது. அய்யாவின் இயற்பெயர் அருணாச்சலம். சிதம்பரத்து  ஆடல்வல்லான், நடராஜப் பெருமான், எல்லாம் வல்ல இறைவன் உலகத்தோர் மூலம் அய்யாவுக்கு அறிவித்த பெயர் தாம் "குரு தெட்சிணாமூர்த்தி". அய்யாவின் அருள் கருணைப் பெற்ற பக்தர்களுள் நானும் ஒருவன் என்ற முறையில் என் அன்பை சிறிய அளவிலாவது வெளிக்காட்டி, அய்யாவின் அருட்கருணையை பலரும் பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று வெளியிடும் வாய்ப்பு பெற்றேன்.

ஜீவசமாதி தெய்வங்கள்:  
அய்யாவின் சமாதிக்கு வலது புறமாக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றார். 


நந்தி:

ஐயாவின் சன்னிதானத்தின் முன்புறமாக, அனைத்து சிவத்தலங்களிலும் உள்ளது போல நந்தியம்பெருமானின் சிலை ஐயாவை நோக்கும் விதமாக அமைந்துள்ளது.


மூலவர்:                         
 சன்னதியின் உட்புறமாக குரு தக்ஷிணாமூர்த்தி ஐயா அவர்கள் மூலவராக அருள் தோற்றம் கொண்டு ஜீவ சமாதி நிலையில் உள்ளார். ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். சிறு வயது முதல் முருகப்பெருமான் மீது கொண்ட அன்பால், எல்லாம் வல்ல அவனின் அருளைப் பற்றி பேசினாலோ, எழுதினாலோ என் கண்கள் ஆனந்த கண்ணீரால் நிறைந்துவிடும். அதைப் போல், ஐயா சார்ந்த குறிப்புகளை இப்போது தரும்போது அதே நிலையில் உள்ளேன். இக்குறிப்புகளை வெறுமனே படிப்பவர்களாக அல்லாமல், ஐயாவின் அருளைப் பெறும் பொருட்டு இந்த பிளாகில் வெளியிடப்பட்டுள்ள படத்தினை பிரிண்ட் செய்து வணங்கி வாருங்கள். நீங்களே உணர்வீர்கள். உங்களின் வேண்டுதல்கள் நிறைவேறினால், திருவாரூர் சென்று, ஐயாவின் சன்னதியில் உங்களால் இயன்ற அளவில் அன்னதானம் செய்யுங்கள். 

               
(தொடர்ச்சி)

இன்ப நிலை

செய்யுள் அறிவோம்!

" நெஞ்சகமே கோயில் 
நினைவே சுகந்தம் 
அன்பே மஞ்சன நீர் 
பூசை கொள்ள வாராய் பராபரமே!
அன்பர் பணி   செய்ய என்னை 
ஆளாக்கி விட்டுவிட்டால் 
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!"

எனவே, ஆலயம் சென்று தொழுவோருக்குத்தான் இறைவன் அவர்கள் வேண்டுவன கொடுப்பான் என்றில்லை. தன் மனத்தூய்மையால் இறைவனின் திருநாமம் சொல்லி தன் நெஞ்சத்திலே இறைவனை ஆலயம் கொள்ளச் செய்து வணங்குவோருக்கும் இறைவனின் அருள் கிட்டப்பெரும் என்பதைத் தான் இச்செய்யுள் உணர்த்துகிறது.

Wall Papers Download