Yahoo! FTP (Fit to Post)
கடந்த 19 ம் தேதியன்று யாஹூ சிங்கப்பூரின் முதன்மை பக்கத்தில் "A Clear and Present Danger" என்ற தலைப்பில் ஈவான் போய் என்பவரால், ஆர்ச்சட் எம்ஆர்ட்டி, இந்தோனேஷியா நாட்டு தீவிரவாத குழு ஒன்றின் (ஜெமா இஸ்லாமியா) வெடிகுண்டு தகர்ப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தது, அந்நாட்டு காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளதை குறித்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதுபற்றிய கருத்து விவாதத்தில் நிறைய சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்தை, கவலையை, கோபத்தை வெளியிட்டிருந்தனர். சிலர், "பொதுமக்கள் விழிப்போடு இருக்கவேண்டும்", என்றும், சிலர்,"காவல்துறை அதிகாரிகள் கணினியின் முன்பாக அமர்ந்தும், மொபைல் போன்களோடு பொழுது போக்கியும், சக அதிகாரிகளுடன் கதைகள் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்", என்றும், சிலர், "அப்படி காவலர்கள் நடந்துகொள்வதாக இருந்தால் நாமெல்லாம் பாதுகாப்பாக எப்படியிருக்க முடியும்?", என்றும், சிலர், "காவல்துறை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம், தண்டத்தொகை வசூலிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்", என்றும், சிலர், "காவல்துறையை குறைசொல்வதை நிறுத்திவிட்டு பொதுமக்களும் நாட்டு நலன் கருதி, காவலர்களுடன் ஒத்துழைக்கவேண்டும், ஒரே கையால் ஓசை வராது, இரண்டு கைகளையும் சேர்த்து தட்டினால் தான் ஓசை வரும்", என்றும், சிலர்,"மனிதவள அமைச்சும், குடியேற்றத்துறையும் சகட்டு மேனிக்கு வெளிநாட்டவரை சிங்கப்பூருக்குள் அனுமதிக்கிறதே, யாரைப்பார்த்தாலும் புதியவர்களாக திரிகிறார்களே, பின் எப்படி சந்தேக நபர் எவர் என்று எப்படிச் சொல்வது?", என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர். அதில், எனது கருத்தையும் பதிவு செய்துள்ளேன். எனது கருத்தை பார்வையிட உங்களையும் அழைக்கிறேன்.அப்படி நான் என்ன சொல்கிறேன்?
2000-த்தில் உலகம் அழிகிறது என்று சொன்னார்கள். ஆனால், உலகம் அப்படி அழியவில்லை. ஆனாலும், உலகின் பல்வேறு மூலைகளில் இயற்கை சீற்றங்களாகிய எரிமலை வெடித்தல், மண்/மலை சரிவு, வெள்ளம், சூறாவளி மற்றும் நாடுகளுக்கிடையிலான போர்கள், நாட்டுக்குள்ளேயே நடக்கும் இன உரிமைப் போர்கள், தீவிரவாதம், கொடிய நோய்கள், பயண விபத்துகள் மற்றும் பல காரணங்களால் உலகம் அழிந்துகொண்டுதான் வருகிறது. காரணம் என்ன என்று மதவாதிகள், அரசியல் நோக்கர்கள், அறிவியல் வல்லுனர்கள் எனப் பலரும் ஆராய்ச்சி செய்து வெளியிட்டாலும், பேசினாலும் பின்பற்றக்கூடியவர்கள், செயல்படுத்தக் கூடியவர்கள் செய்ய வேண்டியதை, செயல்படுத்தவேண்டிய நேரத்தில் செய்யாத அலட்சியப் போக்குகள் தாம் பெரும்பான்மை அழிவுகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.
பொதுவாக, இயற்கை எனப் போற்றப்படும் ஐம்பூதங்களும் இவ்வுலகை வாழ வைக்கவே இறை சக்தியால் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உலகில் பெரும் தவறுகள் நேரும்போதெல்லாம் இதே இயற்கை அழிவை உண்டாக்கியிருக்கின்றன. ஆன்மிகம் சார்ந்த சான்றோர்களுக்கு இது புரியும். ஆனாலும், மனித மனங்கள் இதை சரிவர உணர்வதில்லை. வல்லரசுகளும் சரி, சிற்றரசுகளும் சரி. ஒரு நாட்டின் செயல்பாடுகள் அனைத்து உலக மக்களையும் கருத்தில் கொண்டே இருத்தல் அவசியம். ஏனென்றால், இன்றோ உலக மயமாக்கல் நல்ல விளைவுகளையும் அதே நேரத்தில் எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்கிவிட்டது. ஆயுத பலம், பண பலம், நண்பர்கள் பலம் மிக்க நாடுகள், குறிப்பாக, ஆட்சி புரிவோர் தங்களின் அரசியல் சுயலாபம் கருதியோ, தான் சார்ந்திருக்கும் இனம் சார்ந்தோ, அல்லது தன் நாட்டை மட்டும் வாழ வைக்கவேண்டுமென்று கருதியோ, மற்ற அருகாமை நாடுகள் மீதான அதிகார திணிப்புகளில் ஈடுபடும் தவறான செயல்கள் ஒன்றுமறியா அப்பாவி பொதுமக்களின் உயிர்களை, உடைமைகளை பாழ்படுத்தும் ஆயுதங்களாய் மாறிவிடுகின்றன. உதாரணங்களாக, இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், அவ்வளவு ஏன், பாகிஸ்தான், அதைவிட கொடுமை, இந்தியா.
இந்தியா, சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை எத்தனையோ அரசுகளை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், அப்படி வந்த அரசுகள் எல்லாம் ஆற்றிய பணிகள் என்று பார்த்தால், அவைகளுள் அதிகார வர்க்கத்தினரின் திணிப்புகள் தான் அதிகமாக இருக்கும். கவலை தரக் கூடிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் உள்நாட்டு தீவிரவாதமும், வெளிநாட்டு தீவிரவாதமும் கங்கணம் கட்டிக் கொண்டு நாட்டையே பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. சாதிகளின் போராட்டங்கள், மதங்களின் போராட்டங்கள், தீவிரவாத தாக்குதல்கள் 2020 ல் "இந்தியா வல்லரசு" என்ற இலக்கை எட்ட விடுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆனாலும், தீவிரவாதிகள் என்று வரும் போது, ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபடும் அவர்களுக்கெல்லாம் உண்மையில் நோக்கம் தான் என்ன? கொள்கைகள் தான் எவை? மொத்த உலகில் அவர்கள் சார்ந்த மதம் என்ற ஒன்று மட்டுமில்லாமல் எத்தனையோ மதங்கள், இனங்கள், மொழிகள் அதைச் சார்ந்த மனிதர்கள் எத்தனையோ கோடிகள் வாழ்கின்றனர். உண்மையில் எந்த மதமும் உயிர் பறிக்கும் வித்தையைச் சொல்லித்தரவில்லை. அல்லது, பிறக்கும் போதே எந்த இனத்தாரும் தீவிரவாதியாய் பிறப்பதுமில்லை. இவர்கள் மாற்றப்படுகிறார்கள். ஒருவன் பல நாட்களாக உணவே உட்கொள்ளவில்லை என்று வைத்துக்கொள்வோம். உயிர் போகும் கொடுமையை அனுபவிக்கிறான். அப்போது எவன் ஒருவன் உயிர் தரும் உணவைக் கொடுத்து பசி போக்குகிறானோ அவனே, பசித்தவனுக்கு கடவுள் ஆகிவிடுகிறான். அந்த கடவுள் சொல்வதெல்லாம் இவனுக்கு தெய்வ வாக்கு. அம்மாதிரி கடவுள் நிலையில் இருக்கும் தீயவர்களின் பிடியில் சிக்கும், ஏழை நாடுகளைச் சேர்ந்த அல்லது, பணக்கார நாடாகவே இருந்தும், ஏழைகளாகவே நீடித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மை இனம் சார்ந்த இளைஞர்கள் மனமாற்றம் மிக எளிதாக செய்யப்பட்டு கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு உலகை பேரழிவிற்கும் பேரவலத்திற்கும் உள்ளாக்குகின்றனர்.
இவர்களின் நோக்கம் வேறு என்னவாக இருந்திட முடியும்? இந்த மதம், இந்த மதம் சார்ந்தவர்கள் தான் தீவிரவாதிகள் என்று குறிப்பாக சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது. ஏனெனில், அம்மதம் சார்ந்தோர் உண்மை நிலை என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பவில்லை என நம்புகிறேன். ஒரு பேரழிவை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தோர் உண்டாக்கிவிட்டனர் என்று அறிகிறபோது, அந்த மதம் சார்ந்த பெரியோர் எல்லாம், இனி வரும் காலங்களில் மேலும் அழிவுகள் நடக்கக் கூடாது என்கிற மனநிலையில் தங்கள் சமுதாயத்தில், நாட்டில் கட்டுப்பாடுகளை உருவாக்கிட வேண்டும். அப்படியில்லாமல், மற்ற மதத்தினர் ஒரு குறையைச் சொன்னால் உடனே அதை தேசிய அல்லது உலக அளவில் ஊதிப் பெரிதாக்கி பலரை பலிகடாக்கள் ஆக்கி விட்டுத்தான் விடுகின்றனர். எந்த பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. இந்த உலக மக்கள் இனியேனும் தங்களுக்குள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு, எஞ்சியிருக்கும் மற்றும் இனி வரும் காலங்களை ஆளப்போகும் இளையவர்களின் உயிர்களுக்கு உத்திரவாதம் தரல் வேண்டும். இல்லையெனில், தீவிரவாதம், மீண்டும் ஒரு உலகப்போரைக் கூட உண்டாக்கும்.
சமீபத்தில், மே, 19 ந்தேதி, இந்தோனேஷியாவில் காவல்துறையால் தேடப்பட்டு, கைது செய்யப்பட தீவிரவாத கும்பல் சுமார் 11,000 மலேசிய வெள்ளிகளுடன், மலேசியா வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்து ஆர்ச்சட் விரைவு இரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்தது செய்தி நிறுவனங்கள் வழி தெரிய வந்துள்ளது. அவர்களின் நோக்கம், பிரிட்டிஷ், அமெரிக்கா, மற்றும் அதன் நட்பு நாடுகள் சார்ந்த மக்கள் தங்கியிருக்கும், நடமாடும் முக்கிய பகுதிகளில் அழிவை உண்டாக்குவது தானாம். ஆனால், இவர்களின் நோக்கத்திற்கும், சிங்கப்பூருக்கும் தொடர்பேயில்லை. எத்தனையோ இந்தோனேஷியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். குறிப்பாக, பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பார்க்கின்றனர். உண்மையில், இம்மாதிரி தீவிரவாதிகள் தங்கள் நாடு, தங்கள் மக்கள், அவர்களின் எதிர்காலம் என்ற உணர்வு கொண்டிருப்பவர்களாக இருப்பின் நாச வேலைத் திட்டங்களுக்கு ஏது வேலை. தீவிரவாதிகள் திட்டமிட்டபடி ஏதேனும், நடந்திருந்தால், அதனால், பாதிக்கபட்டிருக்கும் மக்களின் முழு கோபம் யார் பக்கம் திரும்பும், அதனால், எதிர்காலத்தில் நேரும் பிரச்னைகள் தான் என்ன? என்று இத்தீவிரவாதிகள் யோசிப்பார்களா? எனவே, மத ரீதியில் செயல்படும் இம்மாதிரி தீவிரவாதிகள் நசுக்கப்பட வேண்டும். கொடுமையான தண்டனைகள் இவர்களுக்கு தரப்பட வேண்டும். புதிதாய் எவரும் தீவிரவாதிகளாய் ஆவதற்கே நினைக்கக் கூடாது. இவர்களை ஆதரிப்போர் யாராகிலும், தடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், மனித உயிர்கள் நிம்மதியாய் வாழும் காலம் நிச்சயிக்கப்படும்.